கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் நிலையில் அடுத்தக்கட்ட முன் பதிவையும் ரயில்வே நிர்வாகம் நிறுத்திவைத்துள்ளது.
மே 3ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தளர்த்தப்படுமா, ரயில் சேவைகள் மீண்டும் இயக்கப்படுமா என மத்திய அரசு அறிவிக்கவில்லை. இந்த நிலையில், ரயில் சேவை தொடங்கப்பட்டால் தகுந்த இடைவெளியை கடைபிடிக்க தேவையான கோடுகளை வரையும் பணியில் தென்னக ரயில்வே ஈடுபட்டு வருகிறது. முதல்கட்டமாக, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மஞ்சள் நிறத்தில் கோடுகள் வரையும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
முன்பதிவு செய்யுமிடம், நடைமேடைகள், மேம்பாலங்கள், படிகட்டுகள் என அனைத்து இடங்களில் மக்கள் தகுந்த இடைவெளி விட்டு நிற்கும் வகையில் கோடுகள் வரையப்பட்டுள்ளன. இந்நிலையில், கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், ஊரடங்கு, போக்குவரத்து முடக்கம் போன்ற நடவடிக்கைகள் மூலம் நோய் தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க முடியும் என சுகாதாரத் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.