சென்னை பெரம்பூர், மந்தைவெளி, சைதாப்பேட்டை, சிந்தாதிரிபேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துமிடம் (பார்கிங்) பகுதிகளை மூடிய தெற்கு ரயில்வேயின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் அது செல்லாது எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கான விவரங்கள் வருமாறு, "சென்னை கோட்ட வணிகத் துறை அக்டோபர் 19ஆம் தேதி நான்கு ரயில் நிலையங்களில் வாகன நிறுத்துமிடம் ஒப்பந்தத்தை, சில சரத்துகளுக்கு ஒப்புக்கொள்ளாததால் ரத்துசெய்து ஒப்பந்தக்காரர்கள் மூட உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஒப்பந்ததாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை நவம்பர் 11ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரர்கள் கோரிக்கையை கருத்தில்கொண்டு, அவர்களைக் கேட்டு அறிந்து, சட்டத்தின்படி உரிய ஆணையைப் பிறப்பிக்குமாறு சென்னை கோட்டத்திற்கு ஆணையிட்டது. மேலும் ரயில்வே நிர்வாகம் இட்ட ஆணையை ஒதுக்கிவைத்தது.
உயர் நீதிமன்ற ஆணையின்படி, நான்கு ரயில் நிலையங்களிலும் வாகன நிறுத்துமிடம் வசதி மூடிவைத்த நிலையே ( status quo) ஆகும். ரயில்வே நிர்வாகத்தின் ஆணை செல்லாது என்று வெளி வந்த உத்தரவை ஒப்பந்ததாரர்கள் மாற்றாகப் புரிந்துகொண்டு செயல்பட்டுக் கொண்டுள்ளனர்.
ஒப்பந்ததாரர்கள் இடையே கலந்தாய்வு நடத்த முதலில் நவம்பர் 26 அன்று வரச்சொல்லி இருந்தது. அதற்கு நவம்பர் 25ஆம் தேதி அவர்களால் குறுகிய காலத்தில் வர முடியாது என்று பதிலளித்தபடியால் மீண்டும் டிசம்பர் 2 அன்று கலந்தாய்வு நடத்துவதாக அழைப்புவிடப்பட்டது.
அதில் அனைவரும் கால அவகாசம் வேண்டும் எனக் கேட்டபடியால் மீண்டும் டிசம்பர் 11 அன்று கலந்தாய்வு நடத்துவதாக ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர்கள் கலந்தாய்விற்கு வரவில்லை.
நீதிமன்றம் கொடுத்த நான்கு வார அவகாசம் முடிவுற்ற நிலையில் ஒப்பந்தக்காரர்களுக்கு வேறு எந்த மார்க்கமும் இல்லாததால் செய்தி இருட்டடிப்பு செய்யப்பட்டு பொய்யாக வெளியிடப்பட்டுள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.