சென்னை சென்ட்ரலில் தென்னக இரயில்வே பொது மேலாளர் உடனான எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு எம்.பி.க்கள் பங்கேற்று தங்களது தொகுதியில் இருக்கும் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தென்சென்னை தொகுதி எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், “என் தொகுதியில் உள்ள ரயில்வே நிலையங்களில் இருக்கும் குறைகள் குறித்து கூட்டத்தில் பேசினேன். அதில் மயிலாப்பூர், மாம்பலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களை ஆய்வு செய்ய கோரியுள்ளேன். சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்வதில்லை என்று மக்கள் என்னிடம் கூறிய குற்றச்சாட்டை கோரிக்கையாக வைத்துள்ளேன். மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே மூன்று டாஸ்மாக் கடைகள் இருப்பதால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவருகிறது.
எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் பேட்டி தமிழ்நாடு அரசிடம் கூறி அந்த மூன்று டாஸ்மாக் கடைகளையும் நீக்க வழிவகை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளேன். என் தொகுதியைச் சுற்றிய ரயில் நிலையங்களில் எங்குமே தாய்மார்கள் பாலூட்டும் அறை இல்லை, எனவே உடனடியாக அறைகளை கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளேன்.
குறிப்பாக, ரயில்வே துறையில் நடக்கும் போட்டித் தேர்வுகளை அனைத்து மாநில மொழிகளிலும் எழுத நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள வெற்றிடங்களை பூங்காவாக மாற்ற வேண்டும், டிக்கட் கவுன்ட்டர் மேல்புறமாக இருப்பதால் முதியோர்களுக்கு டிக்கெட் எடுப்பதில் பாதிப்பு உள்ளது எனவே அதனை கீழ் தளத்தில் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். மேலும், தமிழ்நாட்டின் பல இடங்களில் பயணிகளுக்கு உள்ள குறைகள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளேன்” என்றார்.