தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கிராமசபைக் கூட்டங்கள் - சமூக இயக்கங்கள் கோரிக்கை!

ஊராட்சிமன்றத் தலைவர்கள், சட்டப்படியாக முறையாக அறிவிப்பு கொடுத்து, உடனடியாக கிராமசபைகளைக் கூட்ட சமூக இயக்கங்களின் சார்பாக கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.

கிராமைசபை கூட்டங்கள்
கிராமைசபை கூட்டங்கள்

By

Published : Feb 5, 2021, 10:46 AM IST

கூட்டுங்க கிராமசபையை!

கரோனாவைக் காரணம்காட்டி, தமிழ்நாட்டில் கிராமசபைகள் ஓராண்டாகக் கூட்டப்படாமல் இருக்கின்றன. கடந்த ஜனவரி 26 அன்று கிராமசபை கூட அரசால் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்களை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊராட்சிகளின் உரிமைகளை உறுதிப்படுத்தும் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஊராட்சிமன்றத் தலைவர்கள், சட்டப்படியாக முறையாக அறிவிப்பு கொடுத்து, உடனடியாக கிராமசபைகளைக் கூட்ட சமூக இயக்கங்களின் சார்பாக கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக இயக்கங்கள் மேலும் விரிவாக கூறியிருப்பதாவது:

புதிய அரசாணை

சமீபத்தில் வெளியான ஊரடங்கை நீட்டிப்பது குறித்த அரசாணை (G.O. (Ms) No.84/ Revenue and Disaster Management (DM_IV) Department, Dated: 31.01. 2021)யில், பகுதி II (ix) இல் பொதுமக்கள் சார்ந்த கூட்டங்கள் கூட்டுவது குறித்த முக்கிய வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் உள்ளிட்ட பொதுமக்கள் சார்ந்த நிகழ்வுகள்/ கூட்டங்களை, கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, அனைத்து மாவட்டங்களிலும் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

சட்ட ஆலோசனை

இதையொட்டி, கிராமசபையைக் கூட்டுவது குறித்து உரிய சட்ட ஆலோசனையைப் பெற்றோம். அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தைக் கூட்ட முடியும் என்றால், கிராமசபைக் கூட்டத்தையும் கூட்ட முடியும். மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் ஒரு அலுவல் ரீதியான கூட்டம் மட்டுமே. அதுவே நடக்கலாம் எனில், பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் பெற்ற கிராமசபையை நிச்சயமாகக் கூட்ட முடியும் என்பதே பெறப்பட்ட சட்ட ஆலோசனையின் சாராம்சம்.

எனவே, மக்களைச் சந்திக்கவும், அவர்களின் குறைகளுக்குச் செவிமடுக்கவும், வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மக்களுடன் கலந்தாலோசிக்கவும், தமிழ்நாட்டின் அனைத்து ஊராட்சிமன்றத் தலைவர்களும், சட்டவிதிகளைப் பின்பற்றி, கிராமசபையைக் கூட்ட, சமூக இயக்கங்கள் சார்பாகக் கோருகிறோம். அப்படிக் கூட்ட, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 மற்றும் உரிய விதிகளின் அடிப்படையில், ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாத மாவட்டங்களில், பொதுமக்கள் தனி அலுவலருக்கும், ஊராட்சிகளின் ஆய்வாளர் (மாவட்ட ஆட்சியர்) அவர்களுக்கும் கிராமசபையைக் கூட்ட, கோரிக்கை வைக்கலாம்.

கிராமசபையைக் கூட்ட பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்ற மாவட்டங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர்கள் கீழ்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கிராமசபையைக் கூட்ட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

1. ஊராட்சி மன்றத்தைக் கூட்டுதல்

மூன்று முழு நாள்களுக்கு முன், இடம், நாள், நேரம், அஜெண்டா உள்ளிட்ட விவரங்களுடன், அனைத்து உறுப்பினர்களுக்கும் முறையாக அறிவிப்புக் கொடுத்து ஊராட்சிமன்றத்தைக் கூட்டுதல், கிராமசபை கூட்டுவது தவிர வேறு விவாதப் பொருள்கள் இல்லையெனில், அதை சிறப்பு ஊராட்சி மன்றக் கூட்டமாக அறிவித்தல்.

2. மன்றக் கூட்டக் குறிப்பு

ஊராட்சிமன்றக் கூட்டத்தில் கிராமசபையை நடத்துவது குறித்து ஆலோசித்து, கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, கிராமசபைக் கூட்டத்தை நடத்த வேண்டிய நாள் (பொது விடுமுறை நாளாக இருக்கக் கூடாது), நேரம், இடம், விவாதிக்க வேண்டிய பொருள்கள் (அஜெண்டா) குறித்து முடிவெடுத்து, அதைக் கூட்டக் குறிப்புப் பதிவேட்டில் முறையான வழிமுறையைப் பின்பற்றி பதிவுசெய்தல்.

3. ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு அனுப்புதல்

கூட்டம் முடிந்த 3 முழு நாள்களுக்குள், இந்தக் கூட்டக் குறிப்பு நகலுடன், கிராமசபை குறித்த அறிவிக்கை (இடம், நாள், நேரம்), அஜெண்டா, பின்பற்றப்போகும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளிட்ட விவரங்களுடன், கிராமசபை நடப்பதற்குக் குறைந்தது 7 முழு நாள்களுக்கு முன், ஒப்புகைச் சீட்டுடன் பதிவு அஞ்சலில் ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு (மாவட்ட ஆட்சியர்) அனுப்புதல்.

4. பொதுமக்களுக்குத் தெரிவித்தல்

கிராம சபை குறித்த அறிவிப்பை (இடம், நாள், நேரம், அஜெண்டா, பின்பற்ற வேண்டிய கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் ஆகிய விவரங்களுடன்), குறைந்தது 7 முழு நாள்களுக்கு முன் ஊராட்சியின் பொதுமக்களுக்கு கீழ்கண்ட வகையில் தெரிவிக்க வேண்டும்.

a) பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் தெளிவாகப் பார்வையில்படும் வகையில் பிற பொது இடங்களில் (பள்ளிக்கூடம், கோயில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி போன்றவை) கூட்ட அறிவிக்கை நகல்களை ஒட்டி தெரிவித்தல்.

b) கிராம ஊராட்சியின் அனைத்து குடியிருப்புகளிலும், தமுக்கடித்தல் (டாம் டாம்) மூலம், கிராமசபைக் கூடும் இடம், நாள், நேரம், அஜெண்டா, பின்பற்ற வேண்டிய கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி பொதுமக்களுக்குத் தெரிவித்தல்.

5. வருகைப் பதிவேடு மற்றும் கூட்டக் குறிப்புகள்

கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற கிராமசபை உறுப்பினர்களை (பொதுமக்களை) வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடச் செய்தல், அதே பதிவேட்டில் கூட்டக் குறிப்புகளை உரிய வகையில் பதிவுசெய்து, பொதுமக்களுக்கு வாசித்துக் காண்பித்து ஊராட்சி மன்றத் தலைவர் கையொப்பமிடல்.

6. குறைவெண் வரம்பு

அரசாணை (G.O. (Ms) No. 130 Rural Development and Panchayat Raj (C4) Department, dated 25.09.2006) அடிப்படையில் தங்கள் கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டிய குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த வேண்டும்.

வரையறுக்கப்பட்ட குறைவெண் வரம்பில், மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஊராட்சியின் மொத்த மக்கள் தொகையில் பட்டியல்/ பழங்குடியினர் எந்த சதவீதம் உள்ளனரோ, அதே சதவீதம் குறைவெண் வரம்பில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

7. கூட்டக் குறிப்புகளை ஊராட்சியின் ஆய்வாளருக்கு அனுப்புதல்

கிராமசபை முடிந்ததும், கூட்டக் குறிப்புகளை ஊராட்சிகளின் ஆய்வாளரான மாவட்ட ஆட்சியருக்கு கூட்டம் முடிந்த மூன்று முழு நாள்களுக்குள் ஒப்புகை சீட்டுடனான பதிவு அஞ்சலில் அனுப்பிவைத்தல்.

இதையும் படிங்க: 'உயிரிழந்த மீனவர்களின் குழந்தைகள் கல்விச்செலவை திமுக ஏற்கும்' - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details