சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சமூக நல்லிணக்க பேரணி நடத்துவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்த நிலையில் பேரணி நடைபெறும் இடங்களில் உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்க கோரி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறியதாவது, ‘அக் 2ம் தேதி, அனைத்து ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து சமூக நல்லிணக்க பேரணியை நடத்த உள்ளோம் என்றும், தமிழ்நாட்டை சனாதான சங்பரிவார் கும்பல் குறி வைத்து இங்கு சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், வன்முறையை தூண்டுவதற்கு சதி திட்டம் தீட்டி வருவதாக குற்றம் சாட்டிய திருமாவளவன் திமுக அரசு மீது தினமும் ஒரு குற்றச்சாட்டை வைத்து வருவதாகவும் கூறினார்.
மேலும் திமுகவுக்கு அடுத்தபடியாக அதிமுக அல்ல நாங்கள் தான் அதிமுகவை பின்னுக்கு தள்ளுவதற்க்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அரசியலை பாஜக செய்வதாகவும் கூறினார். இதனையடுத்து பேசுகையில், ‘தமிழ்நாட்டில் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி பிறந்த நாள் அன்று ஆர் எஸ் எஸ் பேரணி நடத்துவதற்கான தேவை என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் உள்ளோக்கத்தோடு தான் காய்களை நகர்த்தி வருவதாகவும், வன்முறைகளை கட்டவிழிக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் திருமாவளவன் குற்றம் சாட்டினார். மதத்தின் பெயரால், இந்துக்களை பிளவுப்படுத்த வேண்டும் என்று தான் அக். 2ம் தேதியை தேர்வு செய்துள்ளனர் எனக் கூறினார்.
அரசு ஆர்எஸ்எஸ்ஸிற்கு அனுமதி அளிக்க கூடாது:காந்தியடிகளை படுகொலை செய்த கும்பல் அணிவகுப்பை நடத்த உள்ளதாகவும், அதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தாலும், தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த இடம் அளிக்க கூடாது, நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலயுறுத்தினார்.
முதல் முறையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சமூக நல்லிணக்க பேரணியை நடத்துவதாகவும், இந்தப் பேரணிக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு இன்று (செப்-25)டிஜிபியை சந்தித்ததாகவும் அவர் கூறினார். ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளிப்பதன் மூலம் தமிழ்நாட்டில் வன்முறைக்கு வழி வகுக்கும் என்றும் வட இந்தியாவில் அவர்கள் நடத்திய பேரணிகளில் எவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டது என்பதை எல்லோரும் அறிந்த ஒன்றே எனத் தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு ஏற்கதக்கது அல்ல என பேசிய அவர் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக்கொண்டார்.
காந்தி பிறந்த நாளில் சமூக நல்லிணக்க பேரணி - திருமாவளவன் எம்பி மேலும் பேசிய அவர். ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு அயல்நாட்டில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் தடை செய்ய கூடிய அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்றால் ஏன் அவர்கள் இன்று வரை தடை செய்யவில்லை எனவும் ஐஎஸ் அமைப்போடு தொடர்பு இருந்தால் அந்த அமைப்புகளை நீங்கள் தடை செய்யலாம், அரசியல் செய்வதற்காக இந்த நாடகத்தை பாஜக ஆடுவதகாவும் கூறினார்.
இதையும் படிங்க:பெட்ரோல் வெடிகுண்டு:தங்களுக்கு தாங்களே விளம்பரத்திற்காக வீசியிருப்பின் கடும் நடவடிக்கை - தென் மண்டல ஐஜி எச்சரிக்கை