சென்னை: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியைச் சேர்ந்த காசிநாதன் (35), சென்னை கோயம்பேட்டில் உள்ள உணவகம் ஒன்றில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் காசிநாதன், தன்னுடன் பணிபுரிந்து வரும் பூங்காவனம் (27) என்பவரை விழுப்புரத்திற்கு பேருந்தில் ஏற்றி விடுவதற்காக சென்றுள்ளார்.
அப்போது இருவரும் அரும்பாக்கத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து வெளியே வந்துள்ளனர். இந்நிலையில், இருவரையும் மர்மநபர்கள் மூன்று பேர் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, அவர்கள் வைத்திருந்த இரண்டு செல்போன்கள் மற்றும் 4 ஆயிரத்து 800 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து காசிநாதன் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினர், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டவர்கள், அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்கி என்கிற கிரைம் விக்கி (23), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருண்குமார் (22), சூளைமேட்டைச் சார்ந்த சுபாஷ் என்கிற எலி (18) என்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாகப் பணப்பரிவர்த்தனை - குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை