தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் சிறு விளையாட்டு அரங்கங்கள்: மு.க.ஸ்டாலின் - Small play stadiums will be set up in all legislative constituency

அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும், தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

By

Published : Apr 21, 2022, 2:16 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையில், விதி எண் 11-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், "மனித சக்தி என்பது உடல் வலிமையும், உள்ளத்தின் வலிமையும் இணைந்தது. இரண்டு ஆற்றலும் ஒருசேர இருக்கும் மனிதர்களால்தான் அனைத்துத் துறைகளிலும் வெற்றியாளர்களாக மாற முடியும். விளையாட்டு என்பது உடலை உறுதி செய்கிறது; உடலை துடிப்போடு வைத்திருக்கிறது; மனதுக்கும் புத்துணர்ச்சியைத் தருகிறது. அதேபோல், நேர்மையையும், ஒழுக்கத்தையும் கற்றுத் தருகிறது; வெற்றியோ, தோல்வியோ இரண்டும் ஒன்றுதான் என்ற மனப்பக்குவத்தையும் விளையாட்டு உருவாக்குகிறது.

பன்னாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அதிக பதக்கங்கள் வெல்வதை ஊக்குவிக்கக்கூடிய வகையில், தமிழ்நாடு அரசு 3 கோடி ரூபாய் முதல் பல்வேறு வகையான ஊக்க உதவித் தொகைகளைத் தொடர்ந்து வழங்கி, இளைஞர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சர்வதேச அளவிலான வாகையர் (Championship) போட்டிகளில் வெற்றி வாகை சூட ஏதுவாக, பல்வேறு விளையாட்டுகளுக்காக உலகத் தரத்திலான விளையாட்டுக் கட்டமைப்புகளை ஏற்படுத்த சென்னைக்கு அருகில் பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் (Mega Sports City) அமைக்க அனைத்து விதமான நடவடிக்கைளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன்மூலம், தமிழ்நாட்டை சார்ந்த வீரர்கள் சர்வதேச தரத்திலான பயிற்சிகளை மேற்கொண்டு வெற்றி வாகை சூடுவார்கள். ஓலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்த தமிழ்நாட்டின் நான்கு மண்டங்களில் தலா ஒன்று வீதம் நான்கு ஓலிம்பிக் அகாடமிகள் (Olympic Academies) அமைக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் விளையாட்டுப் பயிற்சிகள், அதற்கான வசதிகள் ஏற்படுத்த நினைக்கிறோம். அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும், தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவப்பட உள்ளன. இதன்மூலம், ஏழை எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சார்ந்த கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வாழக்கூடிய இளைஞர்கள் பலன் பெற வழிவகை செய்யப்பட உள்ளது. விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கு வழிகாட்ட ஒரு முயற்சியைத் தொடங்கவிருக்கிறோம்.

* ஒலிம்பிக் தங்கம் தேடுதல் (Olympic Gold Quest) என்ற திட்டம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. வட சென்னை பகுதியானது பல்வேறு விளையாட்டுத் திறமையாளர்களை ஊக்குவிப்பதில் புகழ் பெற்று விளங்கி வருகிறது. அப்பகுதியில் உள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தி மேம்படுத்தக்கூடிய நோக்கில், வட சென்னை பகுதியில் நவீன தொழில்நுட்பங்களோடு கூடிய நவீன குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. இங்கு கையுந்துப்பந்து (Volleyball), இறகுப்பந்து (Badminton), கூடைப்பந்து (Basket ball), குத்துச்சண்டை (Boxing), கபாடி (Kabaddi) மற்றும் இதர உள்ளரங்க விளையாட்டுகளுக்கான வசதிகளோடு (Indoor Games) நவீன உடற்பயிற்சிக் கூடம் (Modern Gym) அமைக்கப்பட உள்ளது.

* அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென்றே தனியாக பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்பட உள்ளது.

* தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்தியத் தற்காப்புக் கலைகளில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய சிலம்பம் விளையாட்டினை ஊக்கப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. சிலம்ப வீரர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கான வேலை வாய்ப்புகளில் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

* சென்னை ஓபன் ATP டென்னிஸ் தொடரை மீண்டும் நடத்தவும், Beach Olympics எனப்படும் கடற்கரை ஒலிம்பிக்ஸ் தொடரை நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* தமிழ்நாட்டில் பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டுப் போட்டிகள் நடத்துவதன்மூலம் விளையாட்டுத் துறையில் புதிய முதலீடுகளும் தொழில் வளர்ச்சியும் ஏற்படும். இதனையொட்டி சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து, தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறை வளர்ச்சியடைவும் வாய்ப்புகள் ஏற்படும்.

* சதுரங்க விளையாட்டில் (Chess) இந்தியாவின் தலைநகராக விளங்கக்கூடிய வகையில் எப்போதுமே தமிழ்நாடு பல்வேறு கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கியிருக்கிறது. அந்த வகையில் உலக அளவில் சிறந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட கிராண்ட் மாஸ்டர்களைத் தமிழ்நாடு தொடர்ந்து உருவாக்கி வருகிறது.

* இந்தியாவில் விளையாட்டு உலகின் மணிமகுடமாக விளங்கக்கூடிய 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28-7-2022 முதல் 10-8-2022 வரை தமிழ்நாட்டில் உலகமே வியக்கக்கூடிய வகையில் பிரம்மாண்டமாகத் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட உள்ளது.

* 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் உலகில் உள்ள 180 நாடுகளைச் சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் அதிலே பங்குபெறவிருக்கிறார்கள்.

* 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்கு இன்றே ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு, அந்தப் பணிகளும் சிறப்பாகச் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக வளர்ந்து சிறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைத்துத் துறைகளும் ஒரு சேர வளர வேண்டுமென்ற எனது எண்ணத்தின் வடிவமாக இத்தகைய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் இளைய சக்தியை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்த தமிழ்நாடு அரசு எப்போதும் முனைப்புடன் செயல்படும்" என்றார்.

இதையும் படிங்க:நடிகர் சிவகுமார் எழுதிய 'திருக்குறள் 50' நூல் வெளியீடு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details