சென்னை: அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக பொதுமக்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு போலி நியமன ஆணையை வழங்கி மோசடியில் ஈடுபடுவார்களைக் கண்டறிந்து, சென்னை காவல்துறை நடவடிக்கையை எடுத்து வருகிறது.
சென்னை மத்திய குற்றப்பிரிவில் செயல்பட்டு வரும் வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு, மோசடியில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
குண்டர் சட்டத்தில் கைது
கடந்த 2020ஆம் ஆண்டு, வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சென்னை வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு காவல் துறையினரால் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 21 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அதில் இரண்டு முக்கிய குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
13 கோடியே 61 லட்சத்து 91 ஆயிரத்து 750 ரூபாயை பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ. 50 லட்சத்தை மீட்டு கொடுத்து, 25 வங்கிக் கணக்குகளை முடக்கி இருப்பதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.