தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

150க்கும் மேற்பட்ட புகார்கள்... 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை - இது பப்ஜி மதனின் லீலைகள்! - பப்ஜி மதன்

மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக ஆயிரத்து 600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

பப்ஜி மதன்
பப்ஜி மதன்

By

Published : Aug 12, 2021, 10:22 PM IST

சென்னை:யூ-ட்யூபர் மதன் பப்ஜி விளையாட்டின் மூலம் ஆபாச பேச்சுக்களால் இளைய சமுதாயத்தினரின் மனதில் நஞ்சை விதைப்பதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார்கள் குவிந்தன.

இதனையடுத்து பப்ஜி மதன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர், அவரை கடந்த ஜூன் 18ஆம் தேதி தர்மபுரியில் வைத்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

குற்றப்பத்திரிகை தாக்கல்

அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக மதனின், மனைவி கிருத்திகாவையும் காவல் துறையினர் கைது செய்து, பின் ஜாமீனில் விடுவித்தனர். பப்ஜி மதனின் இரண்டு சொகுசுக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. மேலும், பப்ஜி மதன் பயன்படுத்தி வந்த யூ-ட்யூப், இன்ஸ்டாகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டன.

கடந்த ஜூலை 5ஆம் தேதி பப்ஜி மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ், நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

இது தொடர்பான விசாரணை அறிவுரைக் கழகத்தில் நடைபெற்று வரும் நிலையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர், பப்ஜி மதன், அவரது மனைவிக்கு எதிராக ஆயிரத்து 600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

குற்றப்பத்திரிகையில் முதல் குற்றவாளியாக மதனும், அடுத்ததாக அவரின் மனைவி கிருத்திகாவும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், அதில் அவர்களுக்கு எதிரான 32 புகார்கள், 32 சாட்சியங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையில் மதன் 2 ஆயிரத்து 848 பேரிடம் கரோனா உதவி செய்வதாகக் கூறி 2 கோடிய 89 லட்சம் ரூபாய் பெற்று பணமோசடி செய்ததன் அடிப்படையில் அவர் மீது பண மோசடி பிரிவின்கீழ், மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

150-க்கும் மேற்பட்ட புகார்கள்

மேலும், நீதிமன்ற உத்தரவின்பேரில் மதன் ஆபாசமாக யூ-ட்யூபில் பேசிய ஆடியோ, சைபர் ஆய்வகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அது முடிந்தபின் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இவ்வழக்கில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், 4 கோடி ரூபாய் பணம் சம்பந்தப்பட்டிருப்பதாக காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 150-க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் 32 புகார்கள் மட்டுமே முறையான எழுத்துப்பூர்வ புகார்களாக ஆதாரங்களுடன் பெறப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதன் தான் எங்களுக்கு மோட்டிவேஷன் - திரண்ட இளைஞர் பட்டாளம்

ABOUT THE AUTHOR

...view details