காங்சிபுரம்:படப்பை அடுத்த ஆத்தனஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் செங்கேணி (29). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி செங்கேணி பணியை முடித்துவிட்டு ஆரம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் இரவு நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது ஆறு பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் செங்கேணியை வழிமறித்து பட்டா கத்தியைக் காட்டி மூன்றாயிரம் ரூபாய், செல்போன் ஒன்றை மிரட்டிப் பிடுங்கி வழிப்பறி செய்துள்ளனர்.
இதனால் பதறிப்போன செங்கேணி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் கையில் வைத்திருந்த கத்தியைக் காட்டி யாராவது கிட்ட வந்தால் வெட்டி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதனால் பொதுமக்கள் அங்கிருந்து பயந்து அலறி ஓடியுள்ளனர். பின்னர் இது குறித்து செங்கேணி மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
தனிப்படை அமைத்துத் தேடிய காவல் துறையினர்!
இதையடுத்து தாம்பரம் காவல் ஆணையர் ரவி கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த அடையாளம் தெரியாத நபர்களை உடனடியாகக் கைதுசெய்ய உத்தரவிட்டார். இதனால் மணிமங்கலம் காவல் துறையினர் தனிப்படைகள் அமைத்து அடையாளம் தெரியாத நபர்களைத் தேடிவந்த நிலையில் வஞ்சுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த வினோத் (21), நாவலூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (20), சாமி என்கிற ஹரிஸ் (25), ராஜேஷ் (20), சென்னை சத்தியா நகரைச் சேர்ந்த ராஜி என்கிற லாரன்ஸ் (19), மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (25) ஆகிய ஆறு பேரைக் கைதுசெய்தனர்.
இதையடுத்து தனிப்படை காவல் துறை அவர்களைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் மீது ஒரகடம், கூடுவாஞ்சேரி, மணிமங்கலம், சென்னை அபிராமபுரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
இதையடுத்து ஆறு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தாம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ரூ.5 கோடி மதிப்பிலான 9 கிலோ தங்கம் சிக்கியது - தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை