சென்னை: கேளம்பாக்கத்திலுள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இதயநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட தன்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கும்படி சிறைத்துறைக்கு உத்தரவிடக் கோரி சிவசங்கர் பாபா மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், இந்த வழக்கில் கைது செய்யப்படுவதற்கு எட்டு நாள்களுக்கு முன் நெஞ்சுவலி காரணமாக டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மூன்று ஸ்டண்ட் பொருத்தப்பட்டதாகவும் அதில் ஒன்று முறையாக பொருத்தப்படாததால் தொடர்ந்து நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு
கைதுக்கு பின் நெஞ்சுவலி காரணமாக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், ஸ்டான்லி மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்றதாக மனுவில் கூறியுள்ள அவர், இதுதவிர 73 வயதான தனக்கு நீரழிவு நோய், கண்பார்வைக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர் சிகிச்சையால் மட்டுமே தனது வாழ்நாளை நீட்டிக்க முடியும் என்பதால், தனது சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், நவம்பர் 25ஆம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி, சிபிசிஐடி காவல் துறையினருக்கும், புழல் சிறை கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
இதையும் படிங்க:தந்தை கொடுத்த பாலியல் தொல்லை - கண்கலங்க வைக்கும் சிறுமியின் ஆடியோ