செங்கல்பட்டு: கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் ஸ்ரீசுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கொடுத்த பாலியல் புகாரின் பேரில், அவர் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
ஜாமீன் கோரி மனு
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், தலைமறைவான சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி காவல் துறையினர் ஜூன் 16ஆம் தேதி டெல்லியில் கைது செய்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அவரது இரண்டு ஜாமீன் மனுக்கள் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம், மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து இரு வழக்குகளில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.
தனக்கும் பள்ளிக்கும் சம்பந்தமில்லை
அவரது மனுவில், கேளம்பாக்கம் பள்ளிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும், சென்னையை அடுத்த நீலாங்கரையில் உள்ள 12 கிரவுண்ட் நிலத்தில் சம்ரக்ஷனா அறக்கட்டளையை மட்டுமே நடத்தி வருவதாகவும், ஆன்மிகம், தமிழ் சார்ந்த சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக மட்டுமே கேளம்பாக்கம் பள்ளிக்குச் சென்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.