சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சங்கரய்யா இன்று (ஜூலை.15) தனது 100ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் குரோம்பேட்டை பகுதியில் உள்ள சங்கரய்யாவின் வீட்டிற்குச் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சிபிஎம் தலைமைக் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் சங்கரய்யாவின் வீட்டிற்குச் சென்று கல்வெட்டு திறந்து கொடியேற்றி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
முதலமைச்சர் வாழ்த்து
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொது செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட அரசியல் தலைவரகளும் சங்கரய்யா வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது, "சங்கரய்யா பிறந்து 100 ஆண்டுகள் ஆகியுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவர் கடுமையாக செயலாற்றியுள்ளார்.