சென்னை: இது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு அரசு ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை 2019 முதல் பயன்படுத்த தடை விதித்தது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்ப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் 01.07.2022 முதல் நாடு முழுவதும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் சில பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்துள்ளது.
ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்று பொருட்களை உற்பத்தி செய்யும் தயாரிப்பாளர்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்குவதற்கும், பல்வேறு மாற்று பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,
மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாறுபாடு அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியோருடன் இணைந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களுக்கான தேசிய கண்காட்சி மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்கம் நடத்தவுள்ளது.
இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இன்றும் (செப்டம்பர் 26) நாளையும் (செப்டம்பர் 27) தேதிகளில் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடக்கிறது. இத்தகைய கண்காட்சி இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் நடத்தப்படுகிறது.
இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்கள் பற்றியும் மற்றும் அதன் தயாரிப்புமுறை மற்றும் காற்று தர மேலாண்மைக்கான தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கும் உதவும்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வில் தவறான விடைகள்...தேர்வர்கள் அதிர்ச்சி