சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன், பன்னாட்டு அளவில் 11 பதக்கங்களையும், தேசிய அளவில் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் வென்றவர். 2006ஆம் ஆண்டில் தோகாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 800 மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையைப் பெற்றவர். பாலின பிரச்சினை காரணமாக சாந்திக்கு அளிக்கப்பட்ட வெள்ளிப்பதக்கம் திரும்பப் பெறப்பட்டு சர்ச்சைக்குள்ளானது.
அதன்பின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராகப் பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில், 2018ஆம் ஆண்டு தன்னுடன் பணிபுரியும் பயிற்சியாளர் ராஜன் ஆப்ரஹாம் சாதி ரீதியாகவும், பாலின அடையாளம் குறித்தும் இழிவாகப் பேசிவருவதாகத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் புகார் கொடுத்தார்.
வழக்குப் பதிவு
இந்தப் புகார் சென்னை காவல் துறையிலும் அளிக்கப்பட்டது. மேலும், தேசிய பழங்குடியினர் ஆணையத்திடம் புகார் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில் வேப்பேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பட்டியலின மக்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்ட விசாரணையில், சாந்தி சவுந்தரராஜன் அளித்த புகாரில், பட்டியலின மக்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரிக்கப்பட்டபோது, முகாந்திரம் இல்லை எனத் தெரியவந்துள்ளதாகவும், பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரணை மேற்கொண்டபோது முகாந்திரம் இருப்பதாகவும் காவல் துறை விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை, தேசிய பழங்குடியினர் ஆணையத்தில் வருகிற மார்ச் மாதம் வர இருக்கிறது அதன் காரணத்தினால், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக உத்தரவுப்படி, புதிதாகப் பதவியேற்ற வேப்பேரி உதவி ஆணையர், தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜனுக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தியுள்ளார்.