சென்னை: சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று முன்தினம் (அக். 14) பணியில் இருந்தபோது நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின், ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் காவல் ஆணையர் பொறுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததால், அதனை தற்போது தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு நேரடியாகக் கவனித்துவருவதாகக் கூறப்படுகிறது.
விரைவில் டிஸ்சார்ஜ்
இது தொடர்பாக, சென்னை காவல் துறை உயர் அலுவலர்கள் சைலேந்திரபாபு உடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாகக் கூறப்படுகிறது. சென்னை காவல் ஆணையரகத்தில் மேற்கொள்ளப்படும் அன்றாடப் பணிகள் குறித்து டிஜிபி சைலேந்திரபாபுவிடம் காவல் துறை உயர் அலுவலர்கள் தகவல் தெரிவித்துவருவதாகவும் கூறப்படுகிறது.
சங்கர் ஜிவால் மீண்டும் பணிக்குத் திரும்பும்வரை இந்தப் பணிகளை சைலேந்திரபாபு மேற்பார்வை செய்து கவனிக்க இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அறுவை சிகிச்சை முடிந்து அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சங்கர் ஜிவால் விரைவில் டிஸ்சார்ஜ் ஆக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: சென்னை காவல் ஆணையருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நிறைவு - நலமுடன் இருப்பதாகத் தகவல்!