மத்திய அரசின் கல்விக்கொள்கைகளை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த நினைக்கும் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கோரிக்கை மனுவை கொடுக்க எழும்பூர் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் வந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைகளின் வளப் பிரிவுகளை தமிழ்நாட்டில் அமல்படுத்தும் நோக்கில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு அமைப்புகளின் தொடர் போராட்டம் மற்றும் எதிர்ப்புகளால் அத்தேர்வுகளை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. இதுவும் ஒரு வகையில் மத்திய அரசின் குலக்கல்வித் திட்டத்தை செயல்படுத்தும் ஒரு முயற்சியாகவே பார்க்க முடிகிறது. குறைந்த மாணவர்கள் வரும் பள்ளிகளை மூடிவிட்டு, அவற்றை நூலகங்களாக மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு தேசியக் கல்விக் கொள்கைகளை தமிழ்நாட்டில் உருவாக்க அதிமுக அரசு முனைகிறது.
அரசின் இதுபோன்ற மக்கள் விரோத திட்டங்களை மிக தெளிவாக அறிந்து கொண்ட பிறகே மாணவர்கள் அவற்றை எதிர்த்துப் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அப்படியிருக்கும் போது மாணவர்கள் படித்து தெரிந்து கொண்டு போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என நடிகர் ரஜிகாந்த் போன்றோர், மாணவர்களுக்கு அறிவுரைகள் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் ” எனக் கூறினார்.