சென்னை: சென்னையைச் சேர்ந்த 21 வயது மாணவி மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் சிறப்புப் பள்ளியில் 10ஆம் வகுப்புப் பயின்றுவந்துள்ளார். மாணவியின் மனநிலையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அவருடைய பகுதியைச் சேர்ந்த ஒருவர் மாணவியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.
இது குறித்து மாணவியின் தாய், கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அளித்த புகாரின்பேரில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை, மனநல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மாணவி மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி மாணவியின் வாக்குமூலத்தை சைதாப்பேட்டை 18ஆவது பெருநகர குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி பதிவுசெய்தார்.
மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள மாணவி என்பதைக் கணக்கில்கொண்டு சிறப்பு மொழிபெயர்ப்பாளர் யாரையும் பயன்படுத்தாமல் நீதிபதி நேரடியாக மாணவியிடமே பெறப்பட்ட வாக்குமூலம் குற்றவாளிக்குச் சாதகமாகக் கூடும் என்பதால், நீதிபதி பதிவுசெய்த வாக்குமூலத்தை ரத்து செய்யக்கோரி மாணவியின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
சிறப்பு மொழிப்பெயர்ப்பாளர் தேவை
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார், முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "மாணவியிடம் ஏற்கனவே, குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி பெற்ற வாக்குமூலம் ரத்துசெய்யப்படுகிறது. இதனால், மீண்டும் புதிதாக வாக்குமூலத்தை பதிவுசெய்ய வேறு ஒரு நீதிபதியை நியமிப்பது தொடர்பாக தலைமை குற்றவியல் நடுவரை காவல் துறை அணுக வேண்டும்" என உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவி நடந்தவற்றை விவரிக்க ஏதுவாக, வாக்குமூலத்தைப் பதிவுசெய்ய பெண் நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் எனவும், மாணவியின் வாக்குமூலத்தை பதிவுசெய்யும்போது சிறப்பு மொழிபெயர்ப்பாளரோ அல்லது அந்த மாணவியின் ஆசிரியரோ யார் அந்த மாணவிக்குச் சௌகரியமாக இருப்பார்களோ, அவர்கள் மாணவி வாக்குமூலம் அளிக்கும்போது நீதிபதிக்கு உதவும் வகையில் இருத்தல் வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பொதுப் பயன்பாட்டுக்கான இடங்களை அரசு தனியாருக்கு விட்டுக்கொடுக்கக் கூடாது - நீதிமன்றம்