சென்னை: சென்னை ஐஐடியில் மேற்கு வங்கத்தைச்சேர்ந்த பட்டியலின மாணவி கடந்த 2017ஆம் ஆண்டு உடன்பயின்ற மாணவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பேராசிரியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால், மாணவி 3 முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
பாலியல் வன்கொடுமை: இச்சம்பவம் தொடர்பாக மாணவி அளித்தப்புகாரின் அடிப்படையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் ஐஐடி முன்னாள் ஆராய்ச்சி மாணவர்களான கிங்சுக் தேப் சர்மா, சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ உள்பட 8 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
8 பேர் மீது வழக்கு:ஆனால், வழக்குப்பதிவு செய்யப்பட்டு வெகு நாள்கள் ஆகியும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் ஐஐடி மாணவி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை நாடி முறையிட்டதன் அடிப்படையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்து சிபிசிஐடி விசாரணைக்கு வலியுறுத்தியது.
மேற்கு வங்கம் விரைந்த தனிப்படை: அதனைத்தொடர்ந்து மயிலாப்பூர் துணை ஆணையரின் தனிப்படையினர் இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான மேற்குவங்கத்தைச் சேர்ந்த கிங்சுக் தேப்சர்மா என்ற முன்னாள் ஆராய்ச்சி மாணவனை கைது செய்ய மேற்கு வங்கம் விரைந்தனர். இதற்கிடையில் ஐஐடி மாணவி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் பாலியல் வன்புணர்வுச் சட்டம் ஆகிய இரு பிரிவுகளை காவல் துறையினர் சேர்த்தனர்.
மேற்கு வங்கத்தில் வைத்து முன்னாள் ஆராய்ச்சி மாணவனைக் கைது செய்த தனிப்படையினர் மாணவன் கிங்சுக் தேப்ஷர்மாவை டிரான்சிட் வாரண்டுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, ஏற்கெனவே இவ்வழக்கில் முன்பிணை பெற்றதன் காரணமாக, அவரைக் கைது செய்தும் சென்னைக்கு அழைத்து வர இயலாத நிலை உருவானது.
கைது செய்வதில் சிக்கல்: எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிணை வழங்க முடியாத பிரிவு என்ற போதும், முன்னரே எஸ்.சி, எஸ்.டி பிரிவு சேர்க்கப்பட்டதற்கு உண்டான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அவரது முன்பிணையை ரத்து செய்யத் தவறியதால் கைது செய்ய சென்ற இடத்தில் சட்டச் சிக்கல்களால் சுணக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
காவல் துறை சம்மன்:இந்நிலையில் முன்னாள் ஆராய்ச்சி மாணவன் கிங்சுக் தேப் சர்மாவுக்கு சென்னை காவல்துறை தரப்பில் இருந்து வரும் 31ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வழக்குத் தொடர்பாக நேற்று (மார்ச் 28) குற்றம்சாட்டப்பட்டுள்ள சுதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ, பேராசிரியர் எடமன்ன பிரசாத் ஆகிய 3 பேரிடம் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"நீ தந்த சிரிப்பை அணிந்திருக்கிறேன்" - ஐஏஎஸ் அதிகாரி டீனா நெகிழ்ச்சி..!