சென்னை:தியாகராய நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன்(46) என்பவரை கடந்த 20ஆம் தேதி,கும்பல் ஒன்று வீடு புகுந்து கத்திமுனையில் கடத்திச்சென்ற வழக்கில் பெண் மருத்துவர் அமிர்தா மற்றும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை தியாகராயநகர் ராமசாமி தெருவைச்சேர்ந்தவர் சரவணன்(46). ரியல் எஸ்டேட் அதிபரான சரவணனை கடந்த 20ஆம் தேதி வீடு புகுந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கத்திமுனையில் கடத்தினர். தொடர்ந்து மேலும், மாம்பலம் போலீசார் அவரது இரு கார்கள், வாட்ச் உள்ளிட்டவைகளைக் கடத்திச் சென்றதை சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதி செய்து, கடத்தப்பட்ட காரின் பதிவு எண்ணைக் கொண்டு 2 மணி நேர தீவிர தேடலுக்குப் பின்னர் ஈசிஆர் பகுதியில் 6 பேரையும் சுற்று வளைத்து கைது செய்தனர். இவர்களிடமிருந்து 3 கார்கள், 16 செல்போன்கள், 2 பொம்மை துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசாரின் விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் மயிலாடுதுறையைச்சேர்ந்த ஆரோக்கியராஜ்(42), கரூரைச் சேர்ந்த அரவிந்த் குரு, அப்ரோஸ், அஜய், விஜயபாண்டி, நாகேந்திரன் என்பது தெரிய வந்தது. விசாரணையின் தொடர்ச்சியாக ஆரோக்கியராஜ், சரவணன் ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட், கட்டுமானம் மற்றும் மணல் வியாபாரம் செய்து வந்தநிலையில் ஒரு கோடி ரூபாய் பணத்தை சரவணன் தராமல் ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே, அடியாட்களுடன் இணைந்து, அவரைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்தது.