சென்னை:தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த சரஸ்வதி என்பவரையும், சரண்யா ஜெயக்குமார், துரைராஜ், முரளிகுமார் உள்ளிட்ட உறுப்பினர்களையும் நீக்கி இந்தாண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
மேலும், புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்க ஆணையத்தின் செயலாளருக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி மற்றும் சரண்யா ஜெயக்குமார் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில், 'குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டப்படி, உரிய காரணங்கள் இல்லாமல், தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்க முடியாது. தங்கள் நியமனத்தை ரத்து செய்து அரசாணை பிறப்பிக்கும் முன் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்கவில்லை' என சுட்டிக்காட்டப்பட்டது.