சென்னை: தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அத்துறை அலுவலர்களுடன் இன்று (மே 11) ஆய்வு கூட்டம் நடத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "வேளாண் துறையின் கட்டமைப்பை ஆய்வு செய்து கூட்டம் நடத்தினோம். பிரதமரின் கிசான் திட்டம் தொடர்பாகவும் ஆய்வு செய்துள்ளோம். கிசான் திட்டம் முறைகேட்டில் தவறுகள் கண்டறிந்து 116 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இனி இதுபோன்று தவறு நடைபெறாது. இதுகுறித்த விசாரணைக்கு பின்னர் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
உழவர் சந்தை சில இடங்களில் முடக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் உழவர் சந்தையை பல இடங்களில் திறக்க ஆய்வு நடைபெற்று வருகிறது. மக்கள் எதிர்பார்த்தபடி வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் உருவாக்கப்படும். இயற்கை விவசாயத்தை மேம்படுத்த, வரும் நிதிநிலை அறிக்கையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
மேலும், தோட்டக்கலைத் துறை மூலமாக நடமாடும் காய்கறி கடைகள், இந்த முழு ஊரடங்கு நேரத்தில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தவறு செய்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை