தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சமூக வலைதளங்களுக்கு தணிக்கை கோரிய வழக்கு - அவகாசம் வழங்கி உத்தரவு

சென்னை: யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் காட்சிகளை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மேலும் கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highcourt
highcourt

By

Published : Sep 2, 2020, 4:25 PM IST

அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் சில கருத்துகள், காட்சிகள் சர்ச்சையாகி வருகின்றன. இந்நிலையில், சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் காட்சிகளை தணிக்கை செய்ய தனி வாரியம் ஒன்றை அமைக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் சுதன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ”கரோனாவால் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பயின்று வருவதாலும், பல்வேறு தரப்பினரும் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் வேலை செய்து வருவதாலும், இணையப் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இச்சூழலில் எந்தவித கட்டுப்பாடும் இன்றி யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய காட்சிகள் பதிவிடப்பட்டு வருகின்றன. குறும்படம் என்ற பெயரில் ஆபாச காட்சிகளும் அதிகளவில் வருகின்றன. இந்தியாவில் கோடிக்கணக்கான நுகர்வோர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வரும் நிலையில், அங்கு பதிவிடுபவைகளை தணிக்கை செய்ய எந்த முறையும் இல்லை. திரைப்படங்களை தணிக்கை செய்ய சென்சார் போர்டு உள்ளதைப் போல சமூக வலைதளங்களை தணிக்கை செய்யவும் தனி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். அதுவரை சமூக வலைதளங்களில் காட்சிகள் வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று (செப்டம்பர் 2) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இது முக்கிய வழக்கு என்பதால், பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரினார். இதனையடுத்து, மத்திய மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: பழவேற்காடு ஏரி முகத்துவாரம் விரைவில் நிரந்தரமாக திறப்பு - அரசு தகவல்

ABOUT THE AUTHOR

...view details