தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரும் 11ஆம் தேதி வேளாண்மைத் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை முதல் முறையாக தாக்கல் செய்யப்படுகிறது.
இதற்காக விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் கருத்துக்கேட்புக் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில வளர்ச்சி குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளர் ஆபிரகாம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறுகையில், "சட்டப்பேரவையில் வரும் 14ஆம் தேதி வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இது தொடர்பாக விவசாயச் சங்கங்கள் அரசியல் கட்சியைச் சார்ந்த விவசாய சங்கங்களின் கருத்துகள் கேட்கப்படுகிறது.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் வேளாண்மைக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிப்படி வரும் 14ஆம் தேதி வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து வேளாண் விளைபொருள்கள் சார்ந்த வியாபாரம் ஏற்றுமதி சங்கங்களிடமும் கருத்துக் கேட்கப்பட்டுள்ளன.
இந்த நிதிநிலை அறிக்கையில் 10 ஆண்டுகளுக்குத் தேவையான அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். நிதிநிலை அறிக்கை ஆட்சி தொடங்கிய முதல் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. ஐந்தாண்டு முடியும் பொழுது விவசாயிகளின் நிலை தன்னிறைவு அடைந்து தலை நிமிர்ந்து நிற்கும் வகையில் இருக்கும்.