புதுச்சேரி: புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடந்த 9 ஆண்டாக மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தநிலையில், தற்போது மீண்டும் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் ஆட்சிசெய்த முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.
பட்ஜெட் தொகையை உயர்த்தக்கோரிக்கை
இதனால் காங்கிரஸ் அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல்செய்ய முடியவில்லை. புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதால், கடந்த மார்ச்சில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தற்போது புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது.
முதலில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல்செய்ய ரூ. 9 ஆயிரத்து, 250 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் முதியோர் உதவித்தொகை ரூ. 500 உயர்வு, ரூ. 10 ஆயிரம் முதியோருக்கு கூடுதலாக உதவித்தொகை, சென்டாக் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு இலவச கல்வி, அரசு துறைகள் மின்துறைக்கு செலுத்த வேண்டிய பாக்கி, தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டிய சலுகை, பொது நிறுவன ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு என நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களைச் சுட்டிக்காட்டி, பட்ஜெட் தொகையை உயர்த்த அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ரூ.10,100 கோடிக்கு புதிய கோப்பு தயாரிப்பு
மதுபான விலையில் 20 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளதால், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. வெளிச்சந்தையில் கடன்பெற்று திட்டங்களை செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பட்ஜெட் தொகை ரூ.10 ஆயிரத்து 100 கோடியாக உயர்த்தப்பட்டு புதிதாக கோப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த கோப்புக்கு அனுமதி கோரி புதுச்சேரி அரசு சார்பில், ஒன்றிய அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதனை மத்திய உள்துறை ஆய்வுசெய்து அனுமதி வழங்கியவுடன், சட்டசபை கூட்டப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
இதையும் படிங்க:கர்நாடகா வர கரோனா சான்றிதழ் கட்டாயம்