காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் பகுதியில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் இருந்த, தாமரைக்கேணி ஏரியில் ஒரு பகுதியை நீர் நிலைகள் பட்டியலில் இருந்து மாற்றி, நிறுவனப் பயன்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த இடத்தில், செம்மஞ்சேரி புறநகர் காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசு, தாமரைக்கேணி ஏரியை கட்டுமானங்களை மேற்கொள்ளும் நிலமாக மாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், நில நிர்வாக ஆணையரின் பரிந்துரையின் அடிப்படையில் நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் காவல் நிலைய கட்டுமானப் பணிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.