ஊரடங்கு தளர்வுகளுக்குப்பின் கோயம்பேடு உணவு தானிய அங்காடியை செப்டம்பர் 18ஆம் தேதியும், காய்கறி அங்காடியை 28ஆம் தேதியும் திறக்க அரசு அனுமதித்தது. இந்நிலையில், கனி அங்காடியை திறக்க உத்தரவிடக் கோரி கோயம்பேடு நான்காவது நுழைவு வாயில் கனி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மாதவரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தையில் போதுமான வசதிகள் இல்லை எனவும், பதிவு செய்யப்பட்ட 700 வியாபாரிகள் உள்ள நிலையில், 200 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மற்ற வியாபாரிகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கோயம்பேடு கனி அங்காடியை திறப்பது குறித்து அரசு மழுப்பலாக பதில் அளிப்பதாகவும், ஆயுத பூஜை வருவதால் கனிகள் மொத்த அங்காடியை திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.