மாற்றுத்திறனாளிகளின் சுய மரியாதை மற்றும் உரிமைகளை ஊக்குவிப்பதற்கும், அவர்களுக்கென்று சிறந்த வாழ்வாதாரத்தை அளிக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையினால் டிசம்பர் 3ஆம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதனடிப்படையில், இன்று மெரினா கடற்கரையை மாற்றுத்திறனாளிகள் கண்டுகளித்திடும் வகையில் “அனைவருக்குமான மெரினா கடற்கரை அனுபவம்” என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலிகளில் எளிதாக கடற்கரைக்கு சென்று கடல் அலைகளை அருகிலிருந்து கண்டுகளிக்க ஏதுவாக, கடற்கரை அணுகுசாலையில் இருந்து கடற்கரை வரையில் சுமார் 225 மீட்டர் நீளத்திற்கு பாதை அமைக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கென்று, 'சுதேஷ் தர்ஷன்' திட்டத்தின் கீழ் ரூ.8.8 லட்சம் மதிப்பில் மணற்பரப்பில் இயங்கக்கூடிய 4 சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.