சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது கணவர் சீனிவாசன். தனியார் நட்சத்திர ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு சீனிவாசன் குழந்தையோடு நடைபயிற்சி மேற்கொள்ள சென்ற போது வீட்டு அறையில் ராஜேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக மாம்பலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ராஜேஸ்வரியின் உடற்கூராய்வுக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜேஸ்வரியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை செய்ததில் ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள காரணம், கே.கே. நகர் பகுதியை சேர்ந்த போலி சாமியார் சுந்தர்ராஜன் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மோசடியில் ஈடுபட்ட போலி சாமியார் கடந்த 2015 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வரும் போது, ஜாதகம் பார்ப்பதாக கூறி, சாமியார் சுந்தர்ராஜனை அணுகியுள்ளனர். அகஸ்திய சன்மார்க்க சத்சங்கம் என்ற பெயரில், பூஜைகள் நடத்தி குறைகளை தீர்ப்பதாக பணம் வசூலித்துள்ளார்.
அகத்தியர் மீது பக்தி கொண்ட சீனிவாசன், சாமியார் சுந்தர்ராஜன் மாயவார்த்தையை நம்பி பணத்தை கொடுத்துள்ளார். வீடு வாங்க திட்டமிள்ளதாக சீனிவாசன் தெரிவித்துள்ளார். வீடு குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி ,சீனிவாசனிடம் 25 லட்சம் வரை வாங்கியுள்ளார்.
இதனிடையே எம்ஜிஆர் நகரில் இருந்து தியாகராய நகர் மேட்லி சாலையில் உள்ள குடியிருப்புக்கு சீனிவாசன் குடும்பத்துடன் மாறியுள்ளார். 3 ஆண்டுகள் ஆகியும் வீடு வாங்கி தராததால், சாமியாரிடம் பணத்தை கேட்டுள்ளார்.
தொடர்ந்து பணத்தை கொடுக்காமல் சாமியார் அலைக்கழித்துள்ளார். பணத்தை திருப்பி தருவதாகவும், அதுவரை வட்டி தருவதாக கூறியுள்ளார். பின்னர், 5 காசோலைகள் முன்தேதியிட்டு கொடுத்துள்ளார். நீண்ட மாதங்களாகியும் சாமியார் கரோனாவை காரணம் காட்டி வீடு வாங்கி தராமலும், தருவதாக கூறிய வட்டியும் தராததால், சாமியார் கொடுத்த காசோலையை பயன்படுத்தியுள்ளனர்.
சாமியார் வங்கி கணக்கில் பணம் இல்லாததால், காசோலைகள் திரும்ப வந்துள்ளது. இது தொடர்பாக தொலைபேசியில் சாமியாரிடம் பேசும் போது, பணத்தை திருப்பி தரமுடியாது எனவும் சட்டரீதியாக பார்க்கலாம் என மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த சீனிவாசன் மற்றும் ராஜேஷ்வரி, கடந்த மாதம் 28 ஆம் தேதி பணத்தை கேட்க சென்றுள்ளன்ர். அப்போது தனது மனைவி ரேவதி அசோக் நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பதாகவும், பணம் கேட்டு தொல்லை செய்தால் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துவிடுவேன் என மிரட்டியதாக சீனிவாசன் தெரிவித்தார்.
இதனையடுத்து பணத்தை இழந்த மன உளைச்சலில் கணவன், மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், தனது மனைவி மனம் உடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தனது மனைவி இறப்புக்கு காரணாமான போலி சாமியார் சுந்தர்ராஜன் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டம் நடத்தினர். போலி சாமியார் சுந்தர்ராஜன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிப்போம் என பெட்ரோல் பாட்டிலுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாமியார் மிரட்டியதற்கான ஆடியோ ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் தங்களை போன்று பல பேர் ஏமாந்துள்ளதாகவும், அவர்களிடமெல்லாம், மனைவி காவல்துறையில் இருப்பதை வைத்து மிரடியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.