உள்ளாடையில் வைத்து கடத்தி வந்த 1 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் - சுங்கத்துறை நடவடிக்கை - சுங்கத்துறை நடவடிக்கை
துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணி ஒருவர் உள்ளாடைக்குள் வைத்து கடத்தி வந்த ரூ.57 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கக்கட்டியை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து இருவரை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமானநிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அலுவலர்கள் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை கண்காணித்தனர்.
அப்போது, சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த அபூபக்கர் (32), சிவகங்கையை சேர்ந்த முகமது மில்கான்(35) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், உடைமைகளை சோதனை செய்ததில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.
அப்போது, உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததைக் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து, 2 பேரிடம் இருந்தும் ரூ.57 லட்சத்து 7 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 180 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: விமானங்களில் கடத்தி வரப்பட்ட 1.08 கிலோ தங்கம் - பறிமுதல் செய்த சுங்கத்துறையினர்!