சென்னை: உலகில் வலிமைமிக்க கடற்படைகளில் ஒன்று இந்திய கடற்படை. ஆனால் யாரிடமிருந்து யாரை பாதுகாக்க இந்த கடற்படை அங்கே பணி செய்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று (அக்., 31) காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கவிருக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், வனப்பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவு – 2021ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெறக்கோரியும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மீனவர் படுகொலை
தண்ணீரில் எப்படி எல்லை பார்க்க முடியும். அப்படியெனில் இந்திய கடற்படை ராணுவம் இந்திய கடல் எல்லையில் நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என தெரிவித்த அவர், தொடர்ச்சியாக நம் மீனவ சொந்தங்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொல்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது என்றார்.
அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வருகிறார்கள் என்பதுதான் என்றவர், கடலில் இது இந்திய கடல் எல்லை, இலங்கை கடல் எல்லை என எப்போது பிரித்தீர்கள் என கேள்வியெழுப்பினார்.