தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தம்பி விஜய்க்கு துணைநிற்பேன் - சீமான் உறுதி - Seeman confirmed

சென்னை: அவதூறு பரப்புரைகளிலிருந்தும், மறைமுக அழுத்தங்களிலிருந்தும் மீண்டுவர தம்பி விஜய்க்கு துணைநிற்பேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தம்பி விஜய்க்குத் துணைநிற்பேன்! - சீமான் உறுதி
தம்பி விஜய்க்குத் துணைநிற்பேன்! - சீமான் உறுதி

By

Published : Jul 15, 2021, 6:33 PM IST

Updated : Jul 15, 2021, 7:34 PM IST

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

"தமிழ்த்திரைத்துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கும் அன்புத்தம்பி விஜய், 2012ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து வாங்கிய மகிழுந்திற்குச் செலுத்தவேண்டிய நுழைவு வரியிலிருந்து விலக்குக்கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததற்காக அவரை வசைபாடுவதும், பழிவாங்கும் போக்கோடு அவதூறு பரப்புவதும் ஏற்புடையதல்ல.

நீதிமன்றத்தால் வழங்கப்பட்டத்தீர்ப்பு என்பது தம்பி விஜய் வரிவிலக்குக்காகத் தொடர்ந்த வழக்கின் தீர்ப்புதானே தவிர, வரி ஏய்ப்புச்செய்துவிட்டார் என்பதல்ல.

ஆனால், அத்தீர்ப்பு வந்தது முதல் தம்பி விஜய் வரி ஏய்ப்பு செய்துவிட்டதைப் போல ஒரு போலியான கருத்துருவாக்கம் செய்து, வலதுசாரிக்கும்பல் அவரைக் குறிவைத்துத் தாக்க முற்படுவது கண்டனத்திற்குரியது.

வேண்டுமென்ற வருமானவரிச் சோதனை

தம்பி விஜய் தொடர்ந்து முறையாக வரிசெலுத்தி வரும் நிலையிலும், அரசியல் காரணங்களுக்காக அவரை அச்சுறுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு, கடந்தாண்டு அவருடைய வீட்டில் வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டது.

அவர் வரி ஏய்ப்புச் செய்ததாக எவ்வித ஆவணங்களும் அப்போது வெளியிடப்படவில்லை. அவர் மீது எந்தவொரு வழக்கும் தொடரப்படவில்லை.

அவரை அச்சுறுத்தி மிரட்டிப் பணிய வைக்கவும், இனி எவரும் திரைத்துறையிலிருந்து மோடி அரசுக்குக்கெதிராகக் குரலெடுக்கக்கூடாது என்பதற்காகவுமே வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டது என்பதை நாடறியும்.

அச்சோதனைகளின்போது விஜய் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட முடியவில்லை என்றபோதிலும், பாஜகவின் ஆட்சி முறையைத் திரைப்படங்களில் சாடியதற்காகவே காழ்ப்புணர்ச்சி கொண்டு தொடர்ச்சியாக அவரை நோக்கிப் பாய்வது, அவருக்கெதிராகப் பொய்யுரைகளைக் கட்டவிழ்த்துவிடுவது முழுக்க முழுக்க அரசியல் வன்மத்தின் வெளிப்பாடேயாகும்.

நீதிமன்றத்தை நாட உரிமையுண்டு

தான் வாங்கிய மகிழுந்திற்குச் செலுத்த வேண்டிய நுழைவு வரி மிக அதிகமாக இருப்பதாக உணர்ந்ததால், அதற்கு விலக்கு அளிக்க வேண்டி சட்டத்தின்படி அவர் நீதிமன்றத்தின் உதவியை நாடியது எவ்வகையிலும் தவறாகாது.

தனக்கான நீதியைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை நாட இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையுண்டு என்பது அரசியலமைப்பு வழங்கியுள்ள தனிமனித உரிமையாகும். அதைத்தான் தம்பி விஜயும் பயன்படுத்தியிருக்கிறார்.

9 ஆண்டுக்கு முன்பாகத் தொடுத்த வழக்கின்கீழ் தற்போது வந்துள்ள நீதிமன்றத்தீர்ப்பை அவர் ஏற்கலாம் அல்லது மேல்முறையீடு செய்யலாம். அதற்கான உரிமையும் அவருக்கு உண்டு.

கடந்த காலங்களில் மட்டைப்பந்து வீரர்களுக்கு இவ்வாறு வரிவிலக்குச்சலுகை அளிக்கப்பட்ட நிகழ்வுகளும் இந்நாட்டில் நடந்துள்ளது. எனவே, நுழைவு வரிக்கு விலக்குக்கேட்பதும், அளிக்கப்படுவதும் புதிதல்ல.

பொதுவாக அரசாங்கத்தை ஏமாற்ற நினைக்கும் எவரும் நீதிமன்றத்தை நாடமாட்டார்கள் என்ற அடிப்படை உண்மையைக்கூட உணராமல், வழக்குத் தொடர்ந்த ஒரே காரணத்திற்காக, தம்பி விஜயை குற்றவாளிபோல சித்தரித்து அவர் மீது அவதூறுகளை அள்ளிவீசுவது எவ்வகையிலும் நியாயமில்லை. இந்த நாட்டில் வரி வரியாக இருந்தால் தவறில்லை.

வரி இருப்பது தவறு

அது மக்களைச் சுரண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் அரசின் கருவியாக மாறிவிட்டது. ஒரு பொருளை வாங்கும் விற்பனை விலைக்கு இணையாக அரசாங்கத்திற்குச் செலுத்தவேண்டிய வரி இருப்பதும், அது அனைத்துத்தரப்பு மக்களையும் கசக்கிப் பிழிவதும்தான் தவறு என்கிறோம்.

இது ஏதோ விஜய் என்ற ஒரு மனிதருக்கான பிரச்னை அல்ல. இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனும், ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பிரச்னையாக வரிவிதிப்பு முறைகள் இருக்கின்றன.

அதனால்தான், இந்நாட்டின் வரிக்கொள்கையும், விதிக்கப்படும் முறையுமே சரியானதல்ல; அது யாவற்றையுமே ஒட்டுமொத்தமாய் மாற்றி, ஏழை மக்களைச் சுரண்டாத வகையில் அமைக்க வேண்டும் என்கிறோம்.

குறிப்பாக, சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்த பிறகு, வியாபாரிகள், தொழில் துறையினர் முதல் எளிய மனிதர்கள் வரை அனைத்துத்தரப்பு மக்களும் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

எவ்வகையில் நியாயம்

தனிப்பெருமுதலாளிகளுக்குப் பெரும் சலுகை வழங்கப்படுகிறதே அதற்கெல்லாம் இவர்கள் எவரும் கேள்விகேட்கவில்லையே ஏன்? அதனையெல்லாம் கண்டும் காணாது போல இருந்து அச்செயல்பாடுகளை மறைமுகமாக ஆதரித்துவிட்டு இப்போது விஜயின் வரிவிலக்குச் சலுகை கோரும் வழக்குக்கு எதிராகப் பொங்கித் தீர்ப்பது எவ்வகையில் நியாயம் என்பது புரியவில்லை.

வரி என்பது வழிப்பறி

‘வேலோடு நின்றான் இடுவென்றது போலும் கோலோடு நின்றான் இரவு’ என வள்ளுவப்பெருந்தகை கூறியதுபோல, வரி என்பது மக்களிடமிருந்து பறிக்கும் வழிப்பறிக்கொள்ளையாய் இருக்கக்கூடாது என்பதைக் கூறிக் கண்டிக்கிறோம்.

விஜய்க்கு துணைநிற்பேன்

அவதூறு பரப்புரைகளிலிருந்தும், மறைமுக அழுத்தங்களிலிருந்தும் மீண்டுவர தம்பி விஜய்க்கு துணைநிற்பேன்" என சீமான் தெரிவித்துள்ளார்.

Last Updated : Jul 15, 2021, 7:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details