தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'எதிர்க்கட்சித் தலைவராக கேள்வி எழுப்பிய உங்கள் மனச்சான்றை உலுக்கவில்லையா?' - சீமான் - Seaman condemned Stalin

கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பரவல் உச்சத்திலிருக்கும் கொடுஞ்சூழலில் மதுபானக்கடைகளைத் திறந்து வைத்து மக்கள் உயிரோடு விளையாடுவதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு அரசிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சீமான் கண்டனம்
சீமான் கண்டனம்

By

Published : Jun 14, 2021, 10:13 AM IST

Updated : Jun 14, 2021, 11:31 AM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பரவலால் நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கரோனா நோய்த்தொற்றுக்கு ஆட்பட்டு, பல நூற்றுக்கணக்கான உயிர்களை நாள்தோறும் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த பேரிடர் மிகுந்த தற்காலச்சூழலில் மதுபானக் கடைகளைத் திறக்க முடிவெடுத்திருக்கும் தமிழ்நாடு அரசின் செயல் பேரதிர்ச்சி தருகிறது. நோய்த்தொற்றுப் பரவல் கட்டுக்குள் வராத இக்கட்டான நிலையில் மக்களின் நலனைத் துளியும் சிந்திக்காது அவசரகதியில் மதுபானக்கடைகளைத் திறக்க முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு அரசே வாசல் திறந்துவிடுவதேன்?

கரோனா தடுப்புப் பணியில் இரவு பகல் பாராது ஈடுபட்டுவரும் இலட்சக்கணக்கான முன்களப்பணியாளர்களின் அரும் பணியினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தற்போது நோய்த்தொற்றுப்பரவல் மெல்ல மெல்ல குறையத்தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் பழையபடி பெருந்தொற்றுச் சூழலை உருவாக்க தமிழ்நாடு அரசே வாசல் திறந்துவிடுவதேன்?

டாஸ்மாக் திறப்புக்கு எதிராக ஸ்டாலின் போராடிய போது

இத்தகைய செயல், கரோனா எனும் கொடுந்தொற்றுக்கு எதிரான போரில் இவ்வளவு நாளாகத் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருந்த முன்களப்பணியாளர்களின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தி, அவர்கள் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் அவர்களது பணி மீதே ஒருவித சலிப்பை ஏற்படுத்தும் என்பதை அரசு அறியாமல் போனது ஏனோ?

சந்தர்ப்பவாதத்தின் உச்சம்

கடந்த ஆட்சியில் நிகழ்ந்த முதலாம் அலைப்பரவலின்போது மதுபானக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து, குடும்பத்தினரோடும், கூட்டணிக்கட்சியினரோடும் கறுப்புடைத் தரித்து வீட்டுவாசலில் நின்று முழக்கமிட்டுப் போராடிய ஸ்டாலின், இன்றைக்குத் தனது தலைமையிலான ஆட்சியில் மதுபானக்கடைகளைத் திறக்க உத்தரவிட்டிருப்பது சந்தர்ப்பவாதத்தின் உச்சமாகும்.

நோய்த்தொற்றுக் குறைந்துவிட்டதாகக் கூறி மதுபானக்கடைகள் திறக்கப்பட்டதை நியாயப்படுத்த முற்படும் முதலமைச்சர் ஸ்டாலின், மூன்றாம் அலைப்பரவலுக்கு வாய்ப்பிருக்கிறதெனும் மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாததேன்? மக்களின் உயிரைவிடவும் மதுபானக் கடைகளினால் அரசுக்கு வரும் வருமானம்தான் பெரிதா என்று எதிர்க்கட்சித் தலைவராக அன்று நீங்கள் எழுப்பிய கேள்வி இன்று உங்கள் மனச்சான்றை உலுக்கவில்லையா?

முதலமைச்சர் உணரத்தவறியதேன்?

ஒரு நாளைக்கு ஏறத்தாழ 500 பேர் நோய்த்தொற்றுக்குள்ளாகும்போது மதுபானக்கடைகளைத் திறக்கக்கூடாதென எதிர்ப்புத் தெரிவித்துவிட்டு, இன்றைக்கு அபரிமிதமாக 15,000 பேர்வரை நாளொன்றுக்குப் பாதிக்கப்படும்போது மதுபானக்கடைகளைத் திறக்க‌ வழிவகைச் செய்வது மக்களின் உயிரோடு விளையாடும் பேராபத்தில்லையா?

நோய்த்தொற்றுப் பரவல் அதிகமிருக்கும் 11 மாவட்டங்களில் மதுபானக்கடையைத் திறக்க அனுமதி மறுத்துவிட்டு, மற்ற மாவட்டங்களில் அனுமதிப்பதனால் மதுவுக்காக ஒரு மாவட்டத்திலிருந்து பிற மாவட்டத்திற்கு, குடிநோயாளிகள் பயணப்பட்டால், நோய்த்தொற்று அதிகரிக்காதா? மதுபானக்கடையை அனுமதித்தால் தொற்றுப்பரவல் இன்னும் பன்மடங்கு வேகமாகப் பெருகும் பேராபத்து ஏற்படும் என்பதை மக்களைக் காக்கவேண்டிய பொறுப்பில் உள்ள முதலமைச்சர் உணரத்தவறியதேன்?

எந்தவிதத்திலும் நியாயமில்லை

தேநீர் கடைகளையும், பழச்சாறு கடைகளையும் திறக்கவே தயக்கம் காட்டிய அரசு, அத்தியாவசியக் கடைகளின் இயங்குதல் நேரம்கூடக் குறைக்கப்பட்டுள்ள தற்காலச்சூழலில், எவ்வித நெருடலோ, குற்றவுணர்வோ இன்றி மதுபானக்கடைகளைத் திறக்க உத்தரவிட்டிருப்பது மிக மோசமான நிர்வாகச் செயல்பாடாகும்.

அதிகாரத்தில் இல்லாதபோது மதுபானக்கடைகளையும், அதன் வழியே வரும் வருவாயையும் கடுமையாக விமர்சித்து, எதிர்த்து அரசியல் செய்துவிட்டு, அதிகாரத்திற்கு வந்தவுடன் அதிமுக அரசை அடியொற்றி அதே வழியில் மதுக்கொள்கையைப் பின்பற்றுவது மோசடித்தனமில்லையா? மதுபானக்கடைகளை வருமானத்திற்காகத் திறந்து வைப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை.

அண்ணாவை அவமதிப்பதற்கு ஒப்பாகும்

‘மதுவை விற்று வருமானம் ஈட்டித்தான் ஆட்சியைத் தொடர வேண்டுமானால் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு நடையைக் கட்டுவேன். மதுபானக்கடைகள் மூலம் வருமானம் ஈட்டுவது குஷ்டரோகிகளின் கைலிருக்கும் தேனை நக்கிச் சுவைப்பதற்கு ஒப்பாகும். மது விலக்குக்காக இந்தியா முழுவதும் பரப்புரை செய்யவும் தயார் ‘ என மதுப்பானக்கடைகளுக்கெதிராக முழக்கமிட்ட அறிஞர் அண்ணாவின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்திக் கொண்டு அவரது நிலைப்பாட்டுக்கு எதிராக மதுபானக்கடைகள் மூலம் வருமானம் ஈட்டுவது அண்ணாவை அவமதிப்பதற்கு ஒப்பாகும்.

சீமான் ஆவேசம்

ஊரடங்கால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது, வேலைவாய்ப்பும், தொழிலும் முடங்கியுள்ளநிலையில், தொற்றுப்பரவல் குறைந்தால் குறைந்தப்பட்சத் தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்படும், இயல்பு வாழ்க்கையைத் தொடரமுடியாவிட்டாலும் அன்றாடப் பிழைப்பையாவது நகர்த்தமுடியும் என்ற ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்களின் சிறு நம்பிக்கையையும் மதுபானக்கடைகளை அவசரகதியில் திறப்பதன் மூலம் முற்றாகச் சிதைத்துள்ளது திமுக அரசு.

ஆகவே, நாடெங்கிலும் மதுபானக்கடைகளின் திறப்பிற்கு எதிராக எழுந்திருக்கும் எதிர்ப்புணர்வைப் புரிந்துகொண்டு, மக்களின் நலனை மனதில் வைத்து கடந்த காலப்படிப்பினைகளை முன்மாதிரியாகக் கொண்டு, மதுபானக்கடைகள் திறக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Jun 14, 2021, 11:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details