தமிழ்நாடு மின் வாரிய முன்னாள் பொறியாளர் செல்வராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ”தமிழகத்தில் மின் வாரியத்திற்கு 1,330 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய அறிவிக்கப்பட்ட டெண்டரில் பல்வேறு விதிகள் மீறப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சாதகமாக இந்த டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.
மேலும், இந்திய கணக்கு தணிக்கை துறையின் அறிக்கையில், கடந்த முறை நிலக்கரி ஊழல் நடந்தது சுட்டிக்காட்டப்பட்டது. தமிழகத்தில் இறக்குமதி செய்யவுள்ள நிலக்கரியில், ஊழலை தடுக்க வருவாய் புலனாய்வு இயக்குநரகத் தலைவர், மத்திய ஊழல் தடுப்பு ஆணையர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஆகியோர் அடங்கிய கூட்டு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
இந்த வழக்கு கடந்த முறை நீதிபதிகள் சுப்பையா மற்றும் சக்திகுமார் சுகுமார குரூப் அமர்வில், மனு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகியவற்றிற்கு உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் பட்டியலிடப்படாமல் இருந்த நிலையில், மனுவை உடனடியாக விசாரிக்கக்கோரி தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி அமர்வில் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் முறையிட்டார்.