சிஏஏவுக்கு ஆதரவளிக்க மாட்டோம் எனத் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, இஸ்லாமிய அமைப்பினர் சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி, இந்திய மக்கள் மன்றத் தலைவர் வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
இந்த மூறையீட்டைக் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரிப்பதாகத் தெரிவித்ததையடுத்து, வாராகி மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கடந்த 14ஆம் தேதி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சென்னை வண்ணாரப்பேட்டையில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.
தமிழ்நாடு முழுவதும் இந்தப் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சியினர் கூட்டாக இணைந்து சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களுக்கு, தமிழ்நாடு அரசு ஆதரவளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
இத்தகைய போராட்டங்கள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழ்நாடு முழுவதும் தீவிரமடையும் மக்கள் போராட்டம்!