கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் டிசம்பர் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மார்கழி ஆருத்ரா தரிசன மகோத்சவம் நடைபெற உள்ளது. ஆனால், இந்த உற்சவத்தில் அம்மாவட்டத்தைத் தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர் சாகமூரி அறிவித்துள்ளார்.
கடந்த 21ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விஷ்ணுதாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில்,“ பிற மாவட்ட பக்தர்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிப்பதற்கு பதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவியுடன் தனி மனித விலகல் நடைமுறைகளை பின்பற்றி கூட்டத்தை முறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம். ஏற்கெனவே பிற மாவட்டங்களுக்கு பயணிக்க பின்பற்றப்பட்ட இ – பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாலும், ஊரடங்கில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாலும், பிற மாவட்ட மற்றும் பிற மாநில பக்தர்களுக்கு தனி மனித விலகல் உள்ளிட்ட விதிகளை பின்பற்றி ஆருத்ரா தரிசன மகோத்சவ நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.