கடந்த 2017ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததையடுத்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக, அபிராமபுரம் காவல் நிலையம் பதிவு செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ரத்து செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவும், பணப்பட்டுவாடாவை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்கக் கோரியும் வழக்கறிஞர் வைரக்கண்ணன் மற்றும் திமுகவைச் சேர்ந்த மருதுகணேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வருமானவரித் துறை வழக்கறிஞர், அமைச்சர் விஜயபாஸ்கரின் 8 நிதி ஆண்டுகால வருமான வரி மதிப்பீட்டில் 4 ஆண்டு காலம் முடிவடைந்திருப்பதாகவும், மீதமுள்ள 4 நிதி ஆண்டு கால மதிப்பீட்டை முடிக்க மேலும் ஓராண்டு காலம் ஆகும் என தெரிவித்தார். அதேபோல, இந்தியத் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் சிபிஐயை இணைக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார்.
அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பணப்பட்டுவாடா புகார் குறித்து 828 பேரிடம் விசாரணை செய்யப்பட்டது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் பணப்பட்டுவாடா புகாரில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்துள்ளதால், வழக்கை சிபிஐக்கு மாற்ற இயலாது என்றார். மேலும், வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வருமானவரித் துறை மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்யவில்லை எனவும் அவர் வாதிட்டார்.