சென்னை:கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட 132-கிமீ கொண்ட சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை (NH 205) விரிவாக்கப்பணி இன்னும் நிறைவடையாமல் உள்ள நிலையில் இது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் திருவள்ளூர் முதல் திருநின்றவூர் இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்காக இரண்டாவது ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாகவும் பருவமழை தொடங்குவதற்கு முன்பே பணிகளை முடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பொது மக்களின் எதிர்ப்பு :சென்னையிலிருந்து அண்டை நகரங்களுக்கு செல்வதற்கு தொடர்ந்து சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெங்களூரு, தடா மற்றும் திருப்பதி நகரங்களுக்கு சாலை விரிவாக்கப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை திட்டமும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்த திட்டமானது கடந்த 2013 ஆம் ஆண்டு, 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டின் மூலம் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் தொடங்கப்பட்டன.
இந்தத் திட்டத்திற்காக மத்திய-மாநில நெடுஞ்சாலைத்துறையினர் முழு மூச்சாக பணியில் இறங்கினர். எனினும் நிலம் கையகப்படுத்துதல், பொது மக்களின் எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாத சூழல் உருவானது. இதனால் இந்த திட்டம் சில வருடங்களுக்கு கைவிடப்பட்டது.
திருப்பதி முதல் திருவள்ளூர் வரை :குறிப்பாக பாடியிலிருந்து திருவள்ளூர் மாவட்டத்தின் திருநின்றவூர் வரை சுமார் 24 கிமீ தூரத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் சற்று சவாலாகவே இருந்ததால், இந்த 22- கிமீ தூரத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மாநில நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.
"திருப்பதி முதல் திருவள்ளூர் வரையிலான நான்கு வழிச்சாலை விரிவாக்கப்பணிகள் நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்டமாக 304 கோடி மதிப்பீட்டில் திருவள்ளூர் முதல் திருநின்றவூர் வரை சாலை விரிவாக்கப்பணிக்கு ஒப்பந்தம் வெளியிடப்பட்டு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு பணிகளை தொடங்க ஆணையிடப்பட்டுள்ளது. இந்த பணி இன்னும் 45 நாட்களுக்குள் தொடங்கும்", என தேசிய நெடுஞ்சாலை துறையின் தொழில்நுட்ப பிரிவின் அலுவலர் ஒருவர் கூறினார்.