சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் 1ஆம் தேதி; ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா தொற்று பாதிப்பு காரணமாக 19 மாதங்களுக்கும் மேல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குப் பள்ளிகளில் நேரடி வகுப்பு திறக்கப்படாமல் இருந்தன.
இதனால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக கல்வியாளர்களும் மனோதத்துவ நிபுணர்களும் தெரிவித்திருந்தனர். மேலும், மாணவர்களின் கற்றல் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகளின் முடிவுகளில் வெளியாகின.
இந்நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் 9, 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
பள்ளிகளின் தூய்மை
அதனைத் தொடர்ந்து 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் கரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நவம்பர் 1ஆம் தேதி முதல் நடத்த அனுமதிக்கப்படும் எனவும் அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
பள்ளியிலுள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, சமையலறை, கழிவறைகள் நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். வகுப்பறை, தலைமை ஆசிரியர் அறையிலுள்ள தளவாட பொருள்கள், கதவு, ஜன்னல்கள் நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.