தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் பொருட்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2019-20ஆம் ஆண்டிற்கான இலவச மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன. கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திருப்பூரிலுள்ள ஒன்பது அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார்.
மாணவர்கள் அன்னப்பறவை போல் மடிக்கணினியைப் பயன்படுத்த வேண்டும்- மாஃபா பாண்டியராஜன்
தமிழ்நாடு முழுவதும் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினியை வழங்கினர்.
மற்றொரு நிகழ்வில் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை வட்டத்துக்கு உட்பட்ட ஆனைமலை நகரம், கோட்டூர், அங்குக்குறிச்சி, சோமந்துறை, சித்தூர், திவான்சாபுதூர், வேட்டைக்காரன் புதூர் ஆகிய ஊர்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இந்த கல்வி ஆண்டுக்கான 1,745 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வழங்கினார்.
திருவள்ளூரைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினியைத் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வழங்கினார். அப்போது அவர்,” மாணவர்கள் அன்னப் பறவை போல் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு தீய விஷயங்களை ஒதுக்கித் தள்ள வேண்டும்.” எனப் பள்ளி மாணவ மாணவியருக்கு கூறினார்.