சென்னை:தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் திறப்பை ஒத்திவைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பள்ளிகள் / கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கும் என வல்லுநர்களும், பெற்றோர்களும் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், பள்ளிகள் (9, 10, 11, 12-ஆம் வகுப்புகள் மட்டும்), அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளி /கல்லூரி விடுதிகள், பணியாளர்கள் விடுதிகள் உள்பட அனைத்து விடுதிகளும், 16.11.2020 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டது.
இச்சூழலில், பள்ளிகளைத் திறப்பது குறித்து பல ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்ததால், நவம்பர் 9ஆம் தேதியன்று அனைத்து பள்ளிகளிலும், பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழகங்களின் கருத்து கேட்கப்பட்டது. சில பள்ளிகளில் பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்றும், சில பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தற்போதைக்கு திறக்கவேண்டியதில்லை என்றும் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்தனர்.
இந்த இருவேறு கருத்துகளையும் கல்வித் துறை ஆராய்ந்து 9, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள், பள்ளி விடுதிகள் 16.11.2020 முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட உத்தரவு, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ரத்து செய்யப்படுகிறது. பள்ளிகள் திறப்பு தேதி சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும்.
அதேபோல், கல்லூரிகளை 16.11.2020 முதல் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகங்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதன்படியும், 5.11.2020 அன்று வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படியும், அனைத்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி / பல்கலைக்கழகங்களை 2.12.2020 முதல் திறக்க உத்தரவிடப்படுகிறது.
மேலும், இதர வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும். 2.12.2020 அன்று திறக்கப்படும் கல்லூரிகளில் மட்டும் மாணவர்களுக்கான விடுதிகள் திறக்கப்படும். கல்லூரிகள் மற்றும் விடுதிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும். பிற மாணவர்களுக்கு ஏற்கெனவே நடைபெற்று வரும் இணையவழி கல்விமுறை தொடர்ந்து நடைபெறும்.
கரோனா தொற்று ஏற்படாவண்ணம் முகக் கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொது மக்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொது மக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.