பள்ளிகள் திறப்பு
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாள்களாக கரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அப்படி 4000க்கும் கீழ் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அதன்காரணமாக மாநிலம் முழுவதும் நேற்று(ஜூலை.5) ஒரே மாதிரியான தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன.
இதற்கிடையில், கரோனா ஜூலை மூன்றாவது வாரத்தில் பள்ளிகளைத் திறக்கவேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் நேற்று முன்தினம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதேபோல பெற்றோர்களும் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதாகவும், வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் மனநல சீர்கேடுகளுக்கு ஆளாவதாகவும் தெரிவித்து பள்ளிகளைத் திறக்க கோரிக்கை வைக்கின்றனர். இப்படி ஒரு தரப்பில் கருத்து தெரிவிக்க, மறுபுறம் கரோனா தொற்றின் மூன்றாம் அலை குறித்த கேள்வி எழுகிறது.
மருத்துவர்கள் கருத்து
இதுகுறித்து மருத்துவர்கள், "ஊரடங்கு மூலமாக மட்டுமே கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் விழுக்காடும் மிகக் குறைவாகவே உள்ளதால் மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியக் கூறுகள் மிக அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் கரோனா தொற்றின்முதல் அலையின்போது பெரும்பாலும் நடுவயதினர், வயதானவர்களுக்கே தொற்று அதிகமாக ஏற்பட்டது. இரண்டாம் அலையில் இளைஞர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. அதனடிப்படையில், மூன்றாவது அலையானது சிறுவயதினரிடம் பரவலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் நலம்
இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகையில், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டாலும், 90 விழுக்காடு குழந்தைகள் அறிகுறியற்றவர்களாகவே இருக்கிறார்கள். 10 விழுக்காடு குழந்தைகள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேண்டிய நிலையில் இருக்கின்றனர். எனவே குழந்தைகளுக்கு கரோனா அறிகுறிகளை அறிவது சிக்கலான ஒன்று. இந்த நிலையில் பள்ளிகளைத் திறப்பதற்கு சீரான பாதுகாப்பு நெறிமுறைகள் தேவை என்கின்றனர்.
இந்த நிலையில், கரோனா தொற்றின் மூன்றாவது அலை குறித்து மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று(ஜூலை.6) தெரிவித்துள்ளார். அத்துடன் செப்டம்பரில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பள்ளிகள் திறப்பு - விரைவில் அறிவிப்பு?