சென்னை:பள்ளிகள் திறப்பு, பாடத் திட்டங்கள் குறைப்பு, பொதுத் தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.
கரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆறு மாதங்களாக பள்ளி, கல்லூரிகள், மூடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, மாணவர்கள் இணையவழிப் பாடங்களை கற்றுக்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.
மேலும், தற்போது உள்ள சூழலில் பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டங்கள் குறைப்பு, பொதுத் தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் நாளை (அக். 6) ஆலோசனை நடத்துகிறார்.
பொதுத் தேர்வை தள்ளி வைக்கலாமா என்பன போன்ற முக்கிய காரியங்கள் குறித்து அலுவலர்களின் கருத்துகளை கேட்கவுள்ளார். மேலும், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவுடன், அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.