சென்னை:சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் உடனான 2-வது நாள் ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பொதுத்தேர்வைப் பாதுகாப்பாக நடத்த வேண்டும் என அறிவுரை கூறினார். மேலும் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உள்ள சிறு குறைபாடுகளையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான தமிழ்நாட்டிற்குத் தனித்துவமான கல்விக் கொள்கை உருவாக்க வேண்டும் என்பதுதான். அதன் அடிப்படையில்தான் மாநிலத்திற்கான கல்விக் கொள்கையை உருவாக்கிய அறிவிப்பை முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு இன்று இருக்கக்கூடிய கல்வியின் தன்மை, நாட்டின் தன்மை மற்றும் எதிர்காலத்தில் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து ஓராண்டிற்குள் வடிவமைக்கும். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பாகும்.
நடத்தாத பாடத்தில் இருந்து கேள்விகள் வராது- அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழ்நாட்டில் மாநில கல்விக்கொள்கை:தேசிய கல்விக் கொள்கையில் உள்ள பல்வேறு அம்சங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் அப்போதே எதிர்த்தார் குறிப்பாக 3,5 ,8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, மீண்டும் குலக் கல்விக்குச் செல்லும் முறை உள்ளிட்டவற்றை எதிர்த்தோம். மேலும் குழுவினர் தேசிய கல்விக் கொள்கை பார்த்து மாநில கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்பது இல்லை. இதில் உள்ள வல்லுநர்கள் குழு மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் தமிழ்நாட்டில் மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பார்கள்.
டெல்லியில் உள்ள பள்ளிகள் கட்டமைப்பில் சிறப்பாக இருக்கிறது. அங்கு 1100 பள்ளிகள் மட்டுமே இருக்கிறது. தமிழ்நாட்டில் 36 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. டெல்லியின் துணை முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு வந்து அங்குள்ள கல்வித் திட்டத்தினை பார்க்க உள்ளார். இரு மாநிலங்களும் கல்வியில் உள்ளவற்றைப் பகிர்ந்துகொள்ள உள்ளோம்.
10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வில் மூன்று அலகுகளும் இரண்டாவது திருப்புதல் தேர்வில் நான்கு அலகுகளும் நடத்தி முடிக்கப்பட்டுத் தேர்வு நடத்தப்பட்டு உள்ளது. பாடத்திட்டத்தில் முடிக்கப்படாத பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்பது சரியாக இருக்காது என்பதைக் கருத்தில்கொண்டு, பொதுத் தேர்வில் கேள்விகள் கேட்கப் படாது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க;தமிழகத்திற்கு தனி கல்விக்கொள்கை! - குழு அமைத்தது அரசு