தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்; TET தேர்வில் 28,984 பேர் தேர்ச்சி - பள்ளிக்கல்வித்துறை தகவல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக ஜூலை 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை விண்ணப்பித்த 1 லட்சத்து 50 ஆயிரத்து 648 பேரில், 28 ஆயிரத்து 984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை
பள்ளிக்கல்வித்துறை

By

Published : Jul 9, 2022, 5:55 PM IST

சென்னை: இடைநிலை ஆசிரியர் பணிக்காக 8 ஆண்டுகள் காத்திருந்தும் பணி வழங்காது, பள்ளி நிர்வாக குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வது இயற்கை விதிக்கு முரணானது என்று கூறி ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், 'தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி உள்ளிட்ட தகுதியுடன் வரும் விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கும் பணியை நடத்தலாம்.

பட்டப்படிப்பை மட்டும் முடித்தவர்கள், 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தில் பணியாற்றுபவர்கள் ஆகியோர் விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்கக்கூடாது; பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் திருத்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட வேண்டும்' என உத்தரவிட்டிருந்தார். இந்த நியமனங்கள் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும் என்றும் மேலும் இந்த வழக்கு தொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு மீண்டும் இன்று (ஜூலை 9) விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை தரப்பில் நீதிமன்ற உத்தரவுப்படி பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக ஜூலை 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை 1 லட்சத்து 50 ஆயிரத்து 648 பேரில், 28 ஆயிரத்து 984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் ஆஜராகி, தேர்வு நடைமுறைகளில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை தெரிவிப்பதற்காக வழக்கை தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அதனை ஏற்று வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை மட்டும் பரிசீலிக்க வேண்டுமென மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விடியல் எப்போது?

ABOUT THE AUTHOR

...view details