சென்னை:பள்ளிகளில் படிக்கும் மாணவிகளிடம் மாதவிடாய் வருகிறதா? இரவு உணவு என்ன ? சிறுநீர் கழிப்பு ஒழுங்காக உள்ளதா? போன்ற சுகாதாரம் சார்ந்த கேள்விகளை எழுப்பி கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் மூலம் மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு புள்ளி விவரத் தகவல்கள் ஆசிரியர்கள் மூலம் பெறப்பட்டு, கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் சுகாதாரத் துறைக்கு தேவையான தகவல்களையும் திரட்டித் தரவேண்டும் என மார்ச் 8ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு மேலும் இந்தப் பணிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் விரைந்து முடித்து தரவேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், மாணவிகளின் மாதவிடாய் குறித்து பகிரங்கமாக கேள்விகளை மாணவ, மாணவிகளிடம் கேட்டு புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சேகரிக்கப்படும் தகவல்களை EMIS எனப்படும் பள்ளிக் கல்வித் தகவல் மேலாண்மை இணைய முறைமையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு ஆசிரியர்கள் அதிருப்தி
கற்றல் பணிகளைத் தாண்டி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால் மாணவர்களின் கற்றல் பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்மைகாலமாக பள்ளிக் கல்வித் துறை பல்வேறு புள்ளிவிவரங்களை சேகரித்து EMIS எனப்படும் பள்ளிக் கல்வித் தகவல் மேலாண்மை இணையப்பக்கத்தில் பதிவேற்ற உத்தரவிட்டது.
இவ்வாறு பல்வேறு தகவல்களையும் சேகரிக்க பள்ளிக் கல்வித் துறை அண்மை காலங்களில் அதிகமாக உத்தரவு பிறப்பிப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும் நிலையில் இதுபோன்ற நிர்வாகப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவதால் வகுப்பறைகளுக்குச் செல்லமுடியாத சூழல் ஏற்படுவதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்துள்ள உத்தரவு ஆசிரியர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. மாணவர்களின் உடல் நலன் மற்றும் இடைநிற்றல் ஏற்படுவதற்கான காரணங்களை அறியும் பொருட்டு பல்வேறு தகவல்களை திரட்ட பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள அம்சங்களை தற்போது பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
மாணவர்களின் நலன் கருதி..
அந்த வகையில் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் உதிரப்போக்கு அதிகமாக உள்ளதா?, மாதவிடாய் ஒழுங்காக வருகிறதா?, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருக்கின்றதா?, மாணவர்களுக்கு பான் ஜர்தா போடும் பழக்கம் உள்ளதா? போன்ற பல்வேறு கேள்விகளைக் கேட்டு அவ்விவரங்களை பதிவுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் கூறும்போது, 'மாணவர்களின் உடல் நலன் சார்ந்து மருத்துவத் துறைக்கு தகவல்களை அளிப்பதற்கும், அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வினை வழங்குவதற்கும்தான் இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை அளிக்க முடியும்' என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'காவல்துறையில் குற்றங்களை எளிதாக கண்டறிய புதிய திட்டம்: வருகிறது GIS MAPPING செயலி ...'