சென்னை:கரோனா வைரஸ் பெருந்தொற்றின் காரணமாக பொருளாதார இழப்பு ஏற்படாத மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட வருவாய் இழப்பு ஏற்படாதவர்களிடம் 85 விழுக்காடு கல்விக்கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், "2021-22ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூல் செய்வது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சில தனியார் பள்ளிகள் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் வசூல் செய்துகொள்ளலாம். தனியார் பள்ளிகளுக்கு 2019-20ஆம் கல்வியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் 85 விழுக்காடு கல்விக்கட்டணம் வசூல்செய்ய அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில் 2021-22ஆம் கல்வியாண்டில் கரோனா தொற்றினால் இழப்பினை சந்திக்காத மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகளின் குழந்தைகள் உள்ளிட்டவர்களிடமிருந்து ஆன்லைன் வகுப்பில் கலந்துகொண்டதன் அடிப்படையில் கட்டணங்களை வசூல் செய்யலாம். ஏற்கெனவே முதல் தவணைக் கட்டணம் வசூல் செய்திருந்தால் பிற கட்டணங்களை பிப்ரவரி 1ஆம் தேதிவரை தவணை அடிப்படையில் வசூல் செய்யலாம்.