சென்னை: தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளுக்குச் சொந்தமான இடங்களை அருகில் உள்ளவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். சில இடங்களில் சமூக விரோதிகளும் பள்ளியின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்களால் தடுக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இது போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் மனுக்கள் அனுப்பப்படுகின்றன.
பள்ளிகளுக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு - மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால், அதனை அகற்றி பள்ளிகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தித்தர வேண்டும் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், "அரசுப் பள்ளிக்குச் சொந்தமான இடங்களை சமூக விரோதிகள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துகொண்டு, மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிகளுக்கு இடையூறு செய்வதுடன், தலைமை ஆசிரியர்களை பணி செய்யவிடாமல், பள்ளிகளின் செயல்பாடுகளுக்கும் குந்தகம் விளைவித்து வருவதாகப் புகார்கள் வந்துள்ளன. எனவே சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசுப்பள்ளி இடங்களை கண்டறிந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, பள்ளிகளின் பாதுகாப்பினை உறுதிபடுத்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பொதுத் தேர்வு கேள்விகள் எப்படி இருக்கும்?-க்ளூ கொடுத்த அமைச்சர்
TAGGED:
School land occupation