சென்னை:தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் நூலகத்துறை செயல்பட்டு வருகிறது.
நூலகத்துறையில் பணியாற்றி வரும் நூலகர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் பிறப் படிகள் மாவட்ட நூலக ஆணைக்குழு நிதியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் அவர்களுக்கு அரசுப் பணியாளர்களுக்கு பிடித்தம் செய்யப்படுவது போல் நிதி எதுவும் பிடித்தம் செய்யப்படுவதில்லை.
எனவே தங்களுக்கும் அரசுப் பணியாளர்களுக்கு பிடித்தம் செய்வது போல் குடும்பநல நிதி சந்தா, சேமநல நிதி சந்தா, புதிய மருத்துவக் காப்பீட்டு சந்தா, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டச் சந்தா ஆகியவற்றை பிடித்தம் செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை செயல்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், "551 மூன்றாம் நிலை நூலகர்கள், 353 ஊர்ப்புற நூலகர்கள், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூலக நிதியில் இருந்து ஊதியம் பெறும் 83 பணியாளர்களின் ஊதியத்தில் இருந்து குடும்பநல நிதி சந்தா, சிறப்பு சேமநல நிதி சந்தா, புதிய மருத்துவக் காப்பீட்டு சந்தா, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டச் சந்தா ஆகியவற்றை வழங்குவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அதற்கான தொகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும்.
அதன் பின்னர் கருவூலம் மூலம் அரசு நிதியில் இருந்து சம்பளம் வழங்கலாம்" என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் யாரெல்லாம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் ? - துணைவேந்தர் விளக்கம்