சென்னை: சென்னை வளசரவாக்கம் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவர் தீக்சித் பள்ளி வாகனம் மோதி பலியானதை தொடர்ந்து வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மேலும் தற்போது மூன்று நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி மற்றும் பேருந்து ஊழியர் ஞானசக்தி ஆகியோர் மீது வளசரவாக்கம் காவல்துறையினர் கொலையாகாத மரணம் விளைவித்தல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பேருந்தில் சிக்கி பள்ளி மாணவர் இறப்பு - விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ் - விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டிஸ்
சென்னையில் தனியார் பள்ளி வாகன சக்கரத்தில் சிக்கி 2 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவத்தில், வளசரவாக்கம் வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளிக்கு சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
சென்னை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மார்ஸ் விளக்கம் கேட்டு அனுப்பி உள்ள கடிதத்தில் , சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் 2 ம் வகுப்பு மாணவர் தீஷித் மீது , பள்ளி பேருந்து மோதி விபத்து ஏற்படுத்தியதன் காரணமாக மரணமடைந்தது குறித்து பள்ளியின் தாளாளர் மற்றும் பள்ளியின் முதல்வர் தனித்தனியாக 24 மணி நேரத்திற்குள் நோட்டீசுக்கு நேரடியாக விளக்கம் சமர்பித்திட வேண்டும்.
- பள்ளி நிர்வாகத்தால் இயக்கப்படும் பேருந்துகளுக்கு என தனியாக பொறுப்பு பணியாளர் நியமனம் செய்யப்படாதது , பள்ளி அளவில் பேருந்துக் குழு அமைக்காதது ஏன்?
- மாணவர்களின் பாதுகாப்பு மீது எந்தவித அக்கறையும் இன்றி 64 வயது முதியவரை பேருந்தின் ஓட்டுநராக நியமனம் செய்தது ஏன்?
- பள்ளி வாளாகத்தில் பேருந்து வந்து செல்லும் நிலையில் பள்ளி வளாக பேருந்து வழித்தடத்தில் எந்தவித வேகத்தடை அமைக்காதது ஏன்?
- பேருந்தில் இருந்து மாணவர்கள் இறங்கிய பின்பு அம்மாணவர்கள் அனைவரும் தங்களது வகுப்பறைகளுக்கு சென்றடைந்தனர் என்பதை பள்ளி முதல்வர் கவனிக்க தவறியது ஏன்?
- பள்ளி முதல் பாடவேளை தொடங்குவதற்கு முன்பு வரை பள்ளி வளாகத்தில் உள்ள மாணவர்களை ஒழுங்குபடுத்திட வேண்டிய கடமையில் இருந்து உடற்கல்வி ஆசிரியரைகொண்டு கவனிக்க தவறியது? உடற்கல்வி ஆசிரியர் விடுப்பு எனும் போது பொறுப்பு மாற்றுப் பொறுப்பாசிரியரை நியமனம் செய்யாதது ஏன்?
- பள்ளித் தாளாளர் விபத்து நடந்தது குறித்து அறிந்திருந்தும் பள்ளிக்கு பிற்பகல் வரை வருகை புரியாமல் இருந்தது மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு தகவல் அளித்திடாமல் இருந்து ஏன்? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'பொதுத்துறை வங்கிகளில் தான் மக்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்' - வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம்